மழை பொழிய வைத்த ஆறுமுக சுவாமி
siddhar-worship
https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை - பொன்னம்மாள் தம்பதிகளுக்கு ஆறுமுக சுவாமி மகனாக பிறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. மகப்பேறு வேண்டி பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடினர். இறுதியில் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப்பெருமானைத் துதித்து நின்றனர். முருகனின் அருளால், அவர்களுக்கு கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பவுர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆறுமுகம் என பெயர் வைத்தனர்.
இளம் வயதில் நன்றாக கல்வி கற்ற ஆறுமுகம், அதன் பயனாக சீவநல்லூரில் கிராம அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். அவரது நிர்வாகப் பணியால், சீவநல்லூருக்கு பல நன்மைகளைச் செய்தார். இவருக்கு புளியரையைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர்.
இல்லறத்தினையும், அரசுப் பணியையும் இருகண்களாக தொடர்ந்தார். இந்த தம்பதியருக்கு பொன்னம்மாள், உலகம்மாள் என இரு குழந்தைகளும் பிறந்தன. இந்த நேரத்தில்தான் நாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா? என ஆறுமுகம் மனதில் கேள்வி பிறந்தது.
கயிலாசம் என்பவர் ஆறுமுகத்திடம் தண்டல்காரராகப் பணியாற்றியவர். இட்ட வேலையை முகம் கோணாது செய்யும் சிவ பக்தர். ஒரு நாள் மாலை நேரம். இருவரும் சீவநல்லூரில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பினர். சற்று தொலைவு வந்ததும், ‘ஐயா! வயிறு சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று விட்டு வந்துவிடுகிறேன்’ என கிளம்பினார் கயிலாசம்.
நீண்ட நேரம் அவரை எதிர்பார்த்திருந்தார் ஆறுமுகம். ஆனால் அவர் வரவில்லை. எனவே தோப்புக்குள் சென்றார். அங்கே ஒரு பள்ளத்தில் கயிலாசம் பத்மாசனம் இட்டு, அந்தரத்தில் மிதந்தபடி தவமேற்றிக் கொண்டிருந்தார். முதலில் அதிர்ந்த ஆறுமுகம், அதன் பின் அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். இறுதியில் தவத்தில் இருந்து எழுந்த கயிலாசத்தை வணங்கி நின்றார்.
அதிர்ந்தே போய்விட்டார் கயிலாசம். ‘சுவாமி! என்னை வணங்காதீர்கள்’ என்றார்.
ஆனால் ஆறுமுகம், ‘சுவாமி! எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அவரது தீர்க்கமாக வேண்டுதலை மறுக்க முடியாத கயிலாசம், ஆறுமுகத்தின் காதில் ரகசியமாக சிலவற்றை ஓதினார்.
அன்று முதல் ஆறுமுகத்தின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. அப்போது அவருக்கு வயது 35. பந்தம் பாசம் அனைத்தையும் தூக்கி எறிந்தார். கால் போன போக்கில் நடந்தார். குற்றால மலைக்கு சென்றார். மலை மீது நடந்து செண்பகாதேவி அருவிக்கு சென்றார். அனைத்தையும் துறந்த துறவிகள் கூடும் இடமான குகையில் ஆறுமுகமும் தங்கினார்.
அன்று சித்ரா பவுர்ணமி. அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர், அங்கிருந்த துறவிகள். இதனால் குகைக்கு உள்ளே செல்ல ஆறுமுக சுவாமிக்கு இடமில்லை. எனவே குகை வாயிலில் அமர்ந்து தவம் புரிந்தார். நள்ளிரவு.. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம்.. அருவி தூறல் ஆறுமுக சுவாமியின் மீது விழுந்தது. அதை உணரும் நிலையில் அவர் இல்லை. அப்போது ஒரு புலி அவர் மீது பாய்ந்தது. அப்படியே தன் வாயில் கவ்வி இழுத்துச் சென்றது.
ஆறுமுக சுவாமி தன்னுணர்வு வந்து எழுந்த போது, அவர் பரதேசி புடை என்னும் குகையில் இருந்தார். ‘என்ன நடந்தது?’ என்று ஆறுமுக சுவாமி உணரும் முன்பாக, அங்கே அன்னை அவருக்கு திருக்காட்சி கொடுத்தாள். அடுத்த கணமே அவருள் ஞானத்தின் பேரொளி எழுந்தது.
அதன் பின் ஆறுமுக சுவாமி, வீட்டுக்கு திரும்பினார். அவரது செயல், நடவடிக்கை எல்லாமே வீட்டில் இருந்தவர்களுக்கு புதிராகவே இருந்தது.
சகோதரர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அறை ஒன்றில் கால் விலங்கிட்டு அடைத்தனர். சித்த புருஷரான ஆறுமுக சுவாமிகளின் மனம் நோக ஆரம்பித்தது. தவ வலிமையால் கால் விலங்குகளை அறுத்தெறிய செய்தார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்தனர்.
இவர் நமது குடும்பத்துக்காக வாழ்பவர் அல்ல. இந்த உலகம் வளம்பெறுவதற்காக பிறந்த மகான் என்பதை குடும்பத்தார் உணர்ந்தனர்.
ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. பல்வேறு ஊர்களில் இருந்தும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் ஓடிவந்தனர். கடைவீதியில் நடந்துவரும் போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!. எனவே ‘சுவாமிகள் இன்று நமது கடைக்கு வர மாட்டாரா?’ என வியாபாரிகள் காத்துக் கிடந்தனர்.
பெரும்பாலும் யாரிடமும் சுவாமிகள் பேசுவதில்லை. பேசினாலும் மழலைச் சொல்லில் தான் பேசுவார். கந்தல் துணிதான் கட்டியிருப்பார். எப்போதும் பாம்புகளுடன்தான் விளையாடுவார். ‘டேய் சங்கரா’ என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ பாம்புகள் வந்து, அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால், ‘டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!’ என்பாராம். அவை மறைந்துவிடும்.
ஆறுமுக சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் போதெல்லாம், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் சுவாமிகளை வணங்கி நின்றனர். ‘சுவாமி மூன்று வருடங்களாக மழை பொய்த்து விட்டது. நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என வேண்டி நின்றனர். சிறிது நேரம் யோசித்த சுவாமிகள் அங்குள்ள சுனைக்குச் சென்றார். அங்கிருந்த சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டார். பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். சுட்டெரித்தது வெயில். பாறையும் தகதகவென கொதித்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த மேகக் கூட்டம், சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடும் வரை மழையாய் கொட்டித் தீர்த்தது. பொதுமக்கள் மகிழ்ந்து சுவாமியை கொண்டாடினர்.
மதுரையில் செல்வந்தர் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுவாமிகளிடம், அன்பர் ஒருவர் இந்த விஷயத்தை கூறினார். மறுநிமிடம் சுவாமிகள், சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ‘சீ போ.. எழுந்திரு’ என்று சொல்லி விட்டுச் சென்றார். சிதையில் இருந்து அவரது மகன் எழுந்தான். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர். சுவாமியை தேடினர். ஆனால் அவரை எங்கும் காணமுடியவில்லை. அதன்பிறகு செங்கோட்டைக்கு வந்து சுவாமிகளை வணங்கி, மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் மதுரை செல்வந்தர்.
சுவாமிகளோ, ‘நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ’ என்றார்.
இதனால் செல்வந்தருக்கு வருத்தம் உண்டானது. தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். உடனே சுவாமிகள், ‘சரி.. நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ’ என்றார். செல்வந்தரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம். தெருக்களில் எறிந்த காசுகள் ஏழை மக்களுக்கு போய் சேர்ந்தது.
சுவாமிகள் நூறு வயதை எட்டியதும் (கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலையை அடைந்தார்.
அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டு போட்டு பார்த்தனர். குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அதன் படி சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. தற்போது இந்த கோவில் பச்சைபசேல் என வயற்காட்டுக்கு நடுவே, குண்டாற்றங்கரையில் உள்ளது. சுவாமிகள் சமாதியாகி 134 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.
தற்போதும் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து வேண்டிய வரத்தினை பெற்று செல்கிறார்கள். குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டி இங்கு வந்து அன்னதானத்தில் கலந்துகொள்கிறார்கள். நாள் பட்ட நோய்கள் தீரவும் சுவாமி அருளுகிறார். நாகதோஷம் இருப்பவர்களும், இந்த ஒடுக்கத்தில் ஆறுமுக சுவாமியை வணங்கி நலம் பெறுகிறார்கள்.
மூதாட்டிக்கு அருளிய சித்தர் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டி ஒருவர், சுவாமிகளை வணங்கி தன் வறுமை குறித்து கூறினார். உடனே அவர் ‘நீ கடைக்குச் சென்று பொருள் வாங்கு. பொருட்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும்’ என்றார்.
அதன்படியே வாங்கிய பொருளுக்கு வீட்டில் நாலணா இருந்தது. தொடர்ந்து மூதாட்டி வாழ்க்கை சராசரியாக போய்க் கொண்டிருந்தது. ஆசை யாரை விட்டது. மூதாட்டி சுவாமிகளிடம் சென்று, ‘சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன’ என்றாள்.
மவுனமாக எழுந்து சென்ற சுவாமிகள், சிறிது மண்ணை அள்ளினார். அது தங்கமாக மாறி மின்னியது. அதை எடுத்து வந்து மூதாட்டியிடம் காட்டினார் ‘பார்த்தாயா! அவ்வளவும் தங்கம். இது போதுமா?’ என்றார்.
மூதாட்டி பேசாமல் நின்றாள். பிறகு சுவாமிகள், ‘இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழு’ என கூறினார். அவர் அறிவுரையில் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை மூதாட்டி மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் உணர்ந்தனர்.
பிடிசோற்றால் குழந்தைப் பேறு :
ஆறுமுக சுவாமியிடம் குழந்தைப் பேறு கேட்டு வருபவர்கள் பலர். சுவாமி தான் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு பிடியை அவர்களுக்குக் கொடுப்பார். அதை சாப்பிட்டவர்கள் குழந்தைப் பேறு பெற்றனர். ஒரு பெண் மட்டும் அறுவறுப்பு காரணமாக, பிடிசோற்றை எடுத்துக்கொண்டு போய் கழுநீர்ப் பானையில் போட்டார். இவருக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் சுவாமியிடம் வந்து குழந்தைப் பேறு வேண்டி நின்றார்.
அப்போது சுவாமிகள், ‘அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்’ என்றாராம். அந்த பெண் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் பிடி சோற்றை வாங்கி குழந்தைப் பேறு பெற்றார்.
இரண்டு மணி நேரம் விழுந்த நீர் :
சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்ய விரும்பினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் ஆறுமுக சுவாமி. ஜமீன்தார் உடனிருக்க அபிஷேகம் தொடங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108-வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் குடத்தில் இருந்து வரும் நீர் நின்றது.
அமைவிடம் :
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் செங்கோட்டை நுழைவு வாயில் இடது புறம் உள்ள குறுகிய ரோட்டில் சென்றால், இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். செங்கோட்டைக்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு. தென்காசி- புனலூர் ரெயில்பாதையில் செங்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கிருந்தும் ஆட்டோவில் கோவிலை அடையலாம்.