காபியின் நல்ல மருத்துவக் குணங்கள்

'கெடுதல்' என்று கருதப்பட்ட காபியின் நல்ல மருத்துவக் குணங்கள் !!!

அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றையும், இங்கே கடுமையாக விமர்சிக்கிறேன். ஒரு மாறுதலுக்காக, 'கெடுதல்' என்று இதுவரை கருதப்பட்ட காபி, மிக நல்ல மருத்துவக் குணங்கள் கொண்டது
காபியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதில் முக்கிய இடம் வகிப்பது, கேஃபின். காபியின் பற்பல நல்ல குணங்களுக்கும், சில கெட்ட குணங்களுக்கும் காரணமாக அமைவது இந்த கேஃபின். இன்னொரு முக்கியமான வேதிப்பொருள், 'ஃபீனாலிக்ஸ்' என்று அழைக்கப்படும் 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்ஸ்' குழுமத்தைச் சேர்ந்தது. தற்போது காணப்படும் பல்வேறு வியாதிகளும் (சர்க்கரை, புற்று உட்பட) 'ஃப்ரீ ரேடிகல்ஸ்' என்ற ஆக்ஸிஜன் சிதைவுப் பொருட்களால்தான் உண்டாகின்றன. இந்த சிதைவுப் பொருட்களை உறிஞ்சி எடுத்து, உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள்தான் 'ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸ்'. இவை காபியில் அபரிமிதமாக இருப்பதாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காபியினால் விளையும் நன்மைகளையும், கட்டுப்படுத்தப்படும்/தடுக்கப்படும் வியாதிகளையும் பட்டியலிட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்! அது மிகமிக நீளமானதொரு பட்டியல். இங்கே ஒருசிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்ற பிரபல மருத்துவ இதழில், ஒரு கட்டுரை வெளியானது. தினமும் 2-3 கப் காபி குடிப்பவர்களின் மரண விகிதம் 10-15 சதவிகிதம் குறைகிறது என்ற உண்மை, 12 வருடங்களாக 4 லட்சம் பேரிடம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்தது. ஆண்களைவிட பெண்களிடம் இந்த நன்மை அதிகமாகத் தெரிந்திருக்கிறது.
உலகம் முழுவதையும், குறிப்பாக நம் நாட்டை பயமுறுத்தி வரும் சர்க்கரை நோயையும் காபி தடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. ஆகவே, சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று 'சயின்ஸ் டெய்லி' இதழ் கூறுகிறது.
உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோரின் சிறுநீரில் கேஃபின் உள்ளது என்பதே இதற்கு சாட்சி என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
காபியிலிருக்கும் 'கேஃபிஸ்டால்' என்கிற வேதிப்பொருள் ரத்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். அதனால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு அதிகமாகலாம் என்று வலுவான ஒரு கருத்து முதலில் இருந்தது. ஆனால், 2-3 கப்புக்கு மிகாமல் அருந்தினால்... கெடுதல் இல்லை - இதயத்துக்கு நல்லதுதான் என்பது தற்போதைய கருத்து.
'காபி குடிப்பதன் மூலம் மனஅழுத்த வியாதி, வெகுவாகக் குறையும். குறிப்பாக, பெண்களுக்கு. தற்கொலைகளை 50% வரை குறைக்க முடியும்' என்கிறது ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி.
இவ்வளவு நல்ல குணங்களையுடைய காபியினால் கெடுதல்கள் என்று ஏதாவது வந்தால், அதற்கு காபிக்கொட்டை தூளுடன் கலக்கப்படும் மற்ற கொட்டைகளும், காபியில் கலக்கும் சர்க்கரை, பால், பாலுக்கு மாற்றுப் பொருளான 'கிரீமர்', கிரீமரில் கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்களும்தான் காரணம்.
காபியில் சுவைக்காக கலக்கப்படும் இன்னொரு பொருள், சிக்ரி. காபி 70 சதவிகிதமும், சிக்ரி 30 சதவிகிதமும் கலக்கப்படும். இதை ஒரு கலப்படப் பொருளாகவே பலரும் முதலில் நினைத்தனர். உண்மையில் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் மிக அற்புதமாகக் கருதப்படுகிறது சிக்ரி. மூலிகைச் செடியான காசினியின் வேரிலிருந்து கிடைக்கும் பொடிதான் இது. சுவைக்குச் சுவை, அதோடு உடலுக்கு - முக்கியமாக ஈரல், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் நன்மை கிடைக்கும்.
காபி நன்கு கொதிக்கும்போதுதான் நன்மை பயக்கும். அப்போதுதான் பல நல்ல வேதிப்பொருட்கள் காபி கொட்டையிலிருந்து கசிந்து வெளிவரும். கொதிக்கும் காபியை ஃபில்டரில் செலுத்தும்போது கேஃபிஸ்டால் போன்ற சில கெட்ட பொருட்கள் வடிகட்டப்பட்டு விடும். எஸ்பிரஸோ காபியும், இன்ஸ்டன்ட் காபியும்கூட நல்லதுதான். ஆனாலும், கொதிக்கும் காபியை டபராவில் ஆற்றிக் குடிப்பதுதான் மிகவும் சுவையானதும், சுகமானதும், நல்லதும்கூட. அப்போதுதான் நிறைய நுரை வரும் - அதில் நல்ல வேதிப்பொருட்கள் நிறைய மிதந்து வரும்.
சத்துக்கள் மிகவும் செறிந்துள்ள உணவுகளை 'சூப்பர் உணவுகள்' (Super Foods) என்று அழைக்கிறோம். மிகவும் சிறியதான அந்தப் பட்டியலில் தற்போது காபியும் இடம்பெற்றிருக்கிறது!
அதிகபட்சம் 4 கப்!
'அல்ஸைமர்' முதியவர்களைத் தாக்கும் ஞாபக மறதி நோய், 'பார்க்கின்ஸன்' (முதியவர்களைத் தாக்கும் உடல் நடுக்க நோய்), ஈரல் நோய்கள், பித்தப்பை கற்கள், பல வகையான புற்றுநோய்கள், ஆண் மலட்டுத்தன்மை, 'கவுட்' என்கிற மூட்டுவலி உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல மருந்து இந்த காபி என்கின்றன பல்வேறு ஆராய்ச்சிகள். 2 முதல் அதிகபட்சமாக 4 கப் வரை மட்டுமே அருந்த வேண்டும் என்பது முக்கியம். கர்ப்பிணிகள், 2 கப்புக்கு மேல் குடித்தால், குறைப்பிரசவம் போன்றவை நேரலாம். எனவே, அவர்கள் டீ அருந்தலாம்.
இந்தியா வந்த கதை!
எத்தியோப்பியாதான் காபியின் பூர்விகம். காபிக் கொட்டைகளை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வறுத்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கூடுதல் சுவை என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. எத்தியோப்பியாவில் இருந்து ஏமன், எகிப்து, துருக்கி, பிரேசில் என்று இது பரவியது. 1670-ல் இன்றைய கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த பாபா பூடான் என்கிற முஸ்லிம் பெரியவர், மெக்காவுக்கு 'ஹஜ்' பயணம் சென்றார். அவர், ஏமன் நாட்டின் வழியாக திரும்பியபோது, காபியைச் சுவைக்க நேரிட்டது. நம் ஊரிலும் இது கிடைப்பதற்கு என்ன வழி என்று யோசித்தவர், பச்சைக் காபி கொட்டைகளை இடுப்பு பெல்ட்டில் மறைத்து எடுத்து வந்தார். மைசூர் அருகில் சந்திரகிரி மலையில் அவற்றை விதைத்தார். அனைத்தும் முளைத்தன. இந்தியாவில் காபி வேரூன்றியது இப்படித்தான்.
######################################################
காலை எழுந்தவுடன் காபி... மாலை முழுவதும் டீ!

காபியின் நல்ல குணங்களைப் பற்றி பார்த்தோம். காபிக்கு பல நூற்றாண்டுகள் முந்தைய பரம்பரையைச் சேர்ந்த டீயைப் பற்றி இப்போது பார்ப்போம்.
உலகில் மிக அதிகம் பேர் அருந்தும் பானம், டீதான். இதில், பல வகைகள் இருந்தாலும்... மூன்றுதான் முக்கியம். கறுப்பு டீ (Black Tea), பச்சை டீ (Green Tea) மற்றும் வெள்ளை டீ (White Tea). இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ. இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.
பச்சை டீதான் மிகவும் பிரபலமான டீ. முக்கியமாக எங்களைப் போன்ற டாக்டர்கள்தான் இதை மிகவும் விளம்பரப்படுத்த உதவியவர்கள். டீ இலைகளை நீராவியில் கொதிக்க வைத்து, உலர வைத்து, பின்னர் பொடி செய்தால் கிடைப்பது பச்சை டீ.
பெரும்பாலானோர் குடிக்கும் டீ, கறுப்பு டீதான். உலர வைத்த இலைகளை நொதித்தல் முறையில் பதனிட்டு பொடி செய்வதே இந்த முறை. இதில்தான் அதிக கேஃபினும் குறைவான ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸும் இருக்கும். ஆனாலும், மருத்துவ குணங்களில் இதுவும் சளைத்ததல்ல.

பொதுவாக டீயில் இருக்கும் கேஃபின் அளவு காபியில் உள்ளதைவிட பாதிதான். ஒரு கப் காபியில் 80 மி.கி கேஃபின் உண்டு. இதுவே ஒரு கப் கறுப்பு டீயில் 40 மி.கி; பச்சை டீயில் 25 மி.கி; வெள்ளை டீயில் 15 மி.கி-தான் (கேஃபினின் நல்ல/கெட்ட குணங்களை நாம் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்).
டீயின் அற்புத குணங்களுக்கு அதில் உள்ள சில அரிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்தான் காரணம். அவற்றில் ஈஜிஸிஜி (EGCG) மிக முக்கியமானது. இந்த ஈஜிஸிஜி-க்கு பல வகை புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு - குறிப்பாக பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் முட்டை - சினைப்பை புற்றுநோய். இவை தவிர வாய், இரைப்பை, குடல், கணையம், ஈரல், நுரையீரல், தோல் போன்ற உறுப்புகளின் புற்றுநோய்களும் இந்த டீக்கு அடங்கும். நுரையீரல் புற்றுநோய் தடுக்கப்படும் என்பது தவிர, சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்காமல் பாதுகாக்கும் என்றும், புற்றுநோய்களுக்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஈரல் புற்றுநோயைத் தடுப்பதோடு, மதுவினால் விளையும் ஈரல் பாதிப்புகளையும் டீ கட்டுப்படுத்த வல்லது.
அப்படியானால், மதுவுக்கு அடிமையானவர்களும் சிகரெட் புகைப்பவர்களும் டீ குடிப்பது அவசியம்தானே?
ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க முடியும் என்றும், அதனால் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் முதலிய வியாதிகளைத் தடுக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
காபியைப் போலவே, முதியவர்களைத் தாக்கும் மூளை - நரம்பு பாதிப்புகளான அல்ஸைமர் வியாதியையும், பார்க்கின்ஸன் வியாதியையும் டீயால் கட்டுப்படுத்த முடியும். 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படும் நோய்க்கூட்டு, சர்க்கரை நோயின் முன்னோடி என்று முன்பு குறிப்பிட்டோம். இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் டீக்கு உண்டு. அதனால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதும் இனிப்பான செய்திதானே? சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் புரை நோயும் டீ சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
டீயால் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்பது ஒரு முக்கிய செய்தி. குறிப்பாக, உடல் பருமனைக் குறைக்கும் வைத்திய முறைகளில் பச்சை டீக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தினமும் 4 - 6 கப்கள் பச்சை டீ குடித்தால்... உடல் எடை குறையும் என்கிறார்கள்.
இவ்வளவு நல்ல குணங்களை உடைய டீக்கு சில கெட்ட குணங்களும் இருக்கும்தானே..?
டீ செடிக்கு, மண்ணிலிருக்கும் ஃபுளூரைட் மற்றும் அலுமினியம் ஆகிய தாதுக்களை உறிஞ்சும் சக்தி மற்ற தாவரங்களைவிட மிக அதிகம். இந்தச் செடியின் பழைய, முற்றிய இலைகளில் ஃபுளூரைட் - அலுமினியம் அதிகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பருகினால் நம் எலும்புகளில் ஃபுளூரைட் - அலுமினியம் தாதுக்களின் தாக்கம் அதிகமாகி, எலும்புச் சிதைவு நோய் ஏற்படும் ஆபத்து உண்டு. டீ இலைகளைக் கைகளால் பறிக்கும் வழக்கம் உள்ள நம் ஊரில் இந்தப் பிரச்னை வராது. ஏனென்றால், இளம் தளிர் இலைகளையே பெண்கள் பறிப்பது வழக்கம். முற்றிய இலைகளைப் பறிப்பதில்லை. ஆனால், இயந்திரங்களையே பயன்படுத்தும் பெரிய பண்ணைகளில் இது சாத்தியமில்லை. நீங்கள் குடிக்கும் டீ எந்த இலையில் கிடைத்தது என்று எப்படித் தெரியும்?
டீ, சில மரபணு மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்பதால் கருவில் வளரும் சிசுக்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காபியைவிட, டீ நல்லது என்றாலும், 2 கப் டீக்கு மேல் அருந்த வேண்டாம்.
காபியைச் சூடாக சுவைத்தால் நல்லது. ஆனால், டீயை மிகவும் சூடாகச் சுவைத்தால்... உணவுக் குழாயில் புற்றுநோய் வரலாம். ஆகவே, டீயை சற்று ஆறிய பிறகே குடிக்க வேண்டும்.
அதெல்லாம் சரி - நீங்கள் குடிக்கும் டீ உண்மையில் டீதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். அண்மையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களில் நடந்த அதிரடி சோதனைகளில், பெரும்பாலான கடைகளில் போலி டீத்தூள் விற்பனையான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்தானே? ஓ.கே... காபி, டீ இரண்டில் எது நல்லது என்று உலகளவில் பட்டிமன்ற ரீதியில் விவாதித்து வருகிறார்கள். இருதரப்பு வாதங்களையும் உங்கள் முன் வைத்தேன். இப்போது நடுவர்போல் ஒரு தீர்ப்புச் சொல்கிறேன். காபி, டீ இரண்டுமே நல்லதுதான். பொதுவாக ஆண்களுக்கு காபியும்... பெண்களுக்கு டீயும் உகந்தது. காலையில் எழுந்ததும் 2 தடவை காபி அருந்துங்கள். பிறகு மாலை வரை 2 - 4 கப் டீ அருந்துங்கள்!