சுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சாதாரணமாக, புதுப்புடவையை நனைத்து, காய வைத்து, கொசுவம் வைத்து, மணையில் அலங்கரித்து, அதை அம்பிகையாக வைத்துப் பூஜிப்பது ஒரு முறை. ஒரு பானையில், சித்தாடை எனப்படும், பாவாடை சட்டையை வைத்து (பூவாடை பானை) வழிபடுவது ஒரு முறை. வீட்டில் கன்னிப் பெண் இறைவனடி சேர்ந்திருக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. கல்யாண மண்டபங்களில், பெண்களை உபசரித்து உணவளிப்பது ஒரு வகை. இது 'அதிசயப். பெண்டுகள்' என்று கூறப்படுகிறது. இதற்கு விசேஷமான ஆசாரமுறைகள் தேவையில்லை. இது குறித்து, கூறப்படும் ஒரு கர்ணபரம்பரைக் கதை பின்வருமாறு.........
ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில், ஏழு மருமகள்கள் இருந்தார்கள். அவர்களின் மாமியார், மிகக் கடினமான சுபாவம் உள்ளவர். மருமகள்களை கடுமையாக வேலை வாங்குவதோடு, வயிறார உணவும் வழங்குவதில்லை அந்த மாமியார். ஒரு நாள், அவள் வெளியூர் சென்றிருந்த போது, அத்தனை மருமகள்களும், ஆசை தீர விதவிதமாகச் சமைத்தார்கள். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டுமென்று திட்டமிட்டு, முதலில் இலை போட்டு பரிமாறி முடித்தார்கள். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது, வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டு, ஒருத்தி சென்று, ஜன்னல் வழியாகப் பார்த்த போது, மாமியார் வந்து விட்டது தெரிந்தது. உடனே, அவள் வந்து சொல்ல, எல்லா மருமகள்களும் பதறிவிட்டார்கள். உடனே, பூஜை அறைக்கு வந்து இறைவியை வேண்ட, அவர்கள் எல்லோரும் காற்றில் கரைந்த கற்பூரம் போல் அம்பிகையுடன் ஒன்றிவிட்டார்கள்.
இவ்வாறு, தேவியுடன் இணைந்த அந்த பெண்களின் வழி வந்தவர்களே, அதிசயப் பெண்டுகள் செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அழைக்கப்படும் பெண்கள், திருமணம் முதலிய விசேஷங்களுக்கு உடுத்துவது போல், பட்டுப்புடவையோ, மற்ற புடவைகளோ (ஆறு கஜம்) உடுத்தலாம். கல்யாணத்திற்கு சமைப்பப்பது போல் இதற்கும் சமைக்கலாம். பெண்களை வரிசையாக உட்கார வைத்து, பரிமாறி, தத்தம்(கையில் நீர் வார்த்தல்) கொடுத்த பின், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பிறகு, மற்றவர்களும் சாப்பிடலாம். அவசரமாகச் சமைத்து, சாப்பிடும் வேளையில், அது இயலாமல் போன அந்த மருமகள்கள் நினைவாகச் செய்யப்படுவதால், எந்த கண்டிப்பான, சட்டதிட்டங்களும் இதற்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள்.
பொதுவான விதிகள்
பொதுவாக எல்லா சுமங்கலிப் பிரார்த்தனைகளுக்கும் (இதைச் சுருக்கமாக, பெண்டுகள் என்று அழைப்பது வழக்கம்)வீட்டில் பிறந்த பெண்கள்(நாத்தனார்கள் அல்லது அத்தைகள்) ஆகியோருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம்.
விசேஷங்களுக்கு முன் செய்யப்படும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் தினத்தை முடிவு செய்த பின், அம்பிகையை வேண்டிக் கொண்டு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு அதை கோவிலில் சேர்க்கலாம்.
ஏதாவது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், விசேஷங்களின் முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய சௌகரியப்படாவிட்டால், தெய்வத்திற்கு முடிந்து வைக்க வேண்டும். அதாவது, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை , மஞ்சள் துணியில் முடிந்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து, கற்பூரம் காட்ட வேண்டும். கட்டாயம், சுமங்கலிப் பிரார்த்தனை பிற்பாடு செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டில் யாரேனும் இறைவனடி சேர்ந்திருந்தால், ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்யலாம். ஆனால் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதில்லை. அம்மாதிரி சந்தர்ப்பங்களில் இதை போல் செய்யலாம். முடிந்து வைப்பதை, ஏதாவது ஒரு நாள் காலையில் நீராடிய பிறகு செய்யலாம்.
வீட்டில், மாமியார் சுமங்கலியாக வாழ்ந்து மறைந்திருந்தால், மருமகள்கள் கட்டாயம் வருடாவருடம் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மாமியாரின் திதிக்கு அடுத்த நாள் இதைச் செய்வது உத்தமம். அன்று இயலாவிட்டால், குறைந்தது ஒரு வாரத்திற்குள் செய்ய வேண்டும்.
ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தால், இருவரும், இதைச் சேர்ந்து செய்வது சிறப்பு. பொதுவாக, தனித்தனியே செய்வதில்லை. சில வீடுகளில், சிரார்த்தம் தனித்தனியாகச் செய்வதால், சுமங்கலிப் பிரார்த்தனையும் தனியாகச் செய்கிறார்கள்.
தாயாதிகள்(பங்காளிகள்) குடும்பத்தில், யாராவது ஒருவர் சுமங்கலிப் பிரார்த்தனை செய்தால், ஆறு மாத காலம் கழித்தே, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு முறை, பித்ருக்கள் பூலோகம் வந்து பின், அவர்கள் இருப்பிடம் சேர, ஆறு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இடையில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் கூட, முடிந்து வைத்து, ஆறு மாத காலம் முடிந்த பின்பே செய்ய வேண்டும்.
செவ்வாய், சனி, ஞாயிறு தவிர மற்ற கிழமைகளில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நாள், கரிநாளாக இருக்கக் கூடாது.
அலங்கரித்து வைக்கும் புடவையை, கலம் அல்லது புடவைக் கலம் என்று சொல்வது வழக்கம். பெண்டுகளுக்கு, ஒன்பது கஜம் புடவையைத்தான் புடவைக் கலத்தில் வைப்பார்கள். சில வீடுகளில், புடவைக் கலத்தில் வைக்கப்படும் புடவையை, வீட்டு மருமகள்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், புடவையை நனைப்பதில்லை. மடித்து வைத்து வழிபாடு செய்து விட்டு, மருமகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். சில வீடுகளில், நனைத்துக் காயவைத்துவிட்டு, மடித்து வைத்துக் கொடுப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து, செய்து கொள்ளவும்.
ஐந்து, அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிகளை அழைப்பது வழக்கம். அவ்வாறு கணக்கிடும்போது, புடவைக் கலத்தையும் கணக்கில் சேர்த்து எண்ண வேண்டும். வீட்டுப் பெண்கள் எத்தனை பேர், வெளியில் அழைக்க வேண்டியவர்கள் எத்தனை பேர் என்பதை முன்பே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
புடவைக் கலத்தில் வைக்கும் புடவையை மூத்த பெண்ணுக்குத்தான் கொடுக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு, புடவையை நனைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே, புடவைக்கலத்தில் அருகில் வைத்து, பூ, சந்தனம் குங்குமம் முதலியவை இட்டு அலங்கரித்து, வழிபாடு முடிந்ததும் கொடுத்து விடலாம்.
ஒரு வீட்டில், சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தும் போது, நாத்தனார்களுக்குத் தான் புடவைக் கலத்தில் வைத்த புடவை கொடுக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்குத் திருமணமானதும், பெண்ணுக்குத் தான் அதைக் கொடுக்க வேண்டும். ஆனால், நாத்தனார்களைக் கட்டாயம் அழைக்க வேண்டும். சௌகரியப்படி, அவர்களுக்கு வேறு புடவை எடுக்கலாம்.
மதுரைப்பக்கத்தில், வீட்டுப் பெண்கள் அனைவருக்கும ஒன்பது கஜப் புடவை வாங்குவார்கள். சில வீடுகளில், மூத்த பெண்ணுக்கு மட்டும் புடவைக் கலத்தில் வைக்கும் ஒன்பது கஜம் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு ஆறு கஜம் வாங்குவார்கள். சில வீடுகளில், அழைக்கப்படும் பெண்கள் அனைவருக்குமே புடவைகள் வாங்குவார்கள். சௌகரியப்படாவிட்டால், வீட்டுப் பெண்ணுக்கு மட்டும் புடவை வாங்கி, மற்றவர்களுக்கு ரவிக்கைத் துணிகள் வாங்கலாம். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளலாம். ஆனால், புடவை ரவிக்கைகள், கறுப்பு நூல் கலக்காததாக இருப்பது கட்டாயம்.
சில குடும்பங்களில், சுமங்கலிகளோடு ஒரு கன்யா பெண் குழந்தையையும் அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது. அப்படியிருந்தால், அந்தக் குழந்தைக்கும் உடைகள் வாங்க வேண்டும்.
முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள் இருவரையும் அழைப்பதில்லை. ஒருவரை, அநேகமாக மாமியாரை மட்டுமே அழைப்பார்கள். விதிவிலக்காக, மருமகள், மாமியார் இருவருமே வீட்டுப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அழைக்கலாம்.
தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க - வாங்க_வேண்டியவை:
புடவை, ரவிக்கைத் துணிகள், குறைந்தது இருபது வெற்றிலைகள், பாக்கு, தேங்காய், பெரிய வாழைப்பழங்கள் இரண்டு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் குங்கும டப்பாக்கள், மருதாணி(கோன்), சற்று நீளமாக நறுக்கிய பூச்சரம், கண்ணாடி வளையல்கள், தட்சணையாக ரூபாய்கள்(வசதிப்படி) ஆகியவை வைக்க வேண்டும். இவற்றைக் கவரிலோ அல்லது, தட்டு, கூடைகளில் வைத்துக் கொடுக்கலாம். எவர்சில்வர் தட்டு தவிர்ப்பது நல்லது.
சமையலில் சேர்க்க வேண்டியவை
சிரார்த்த காரியங்களுக்கு இருப்பதைப் போல்,இதற்கு எல்லாம் சேர்க்கக் கூடாது என்பதில்லை. இங்கிலீஷ் காய்கறிகள் எனக் குறிப்பிடப்படும், முட்டைக் கோஸ், பீன்ஸ், நூல்கோல், இவற்றோடு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.
பொடி வகைகளில், புதிதாக அரைத்த குழம்புப் பொடி, மிளகாய்ப் பொடி, வரட்டு அரிசி மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம். சர்க்கரை, கேசரிப்பவுடர், முந்திரிப்பருப்பு, தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கலாம். வறுத்து அரைத்து சமைக்கலாம். சிலர் கேசரிப்பவுடர் சேர்ப்பதில்லை. வனஸ்பதி கூட சில வீடுகளில் உபயோகிக்கிறார்கள்.
பொதுவாக, பாசிப்பருப்பு பாயசம், வெள்ளரி, வெண்டைக்காய் அல்லது தேங்காய் மட்டும் அரைத்து தயிர்ப்பச்சடி, மாங்காய் அல்லது விளாம்பழம் போட்டு இனிப்புப் பச்சடி, வாழைக்காய் அல்லது கத்தரிக்காய் காரம் போட்ட பொரியல், புடலை, அவரைக்காய், கொத்தவரங்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு, தேங்காய் போட்ட பொரியல், பிட்லை(ரசவாங்கி), வெண்பூசணி அல்லது புடலை பொரித்த கூட்டு, மோர்க்குழம்பு, தக்காளி ரசம், கலந்த சாத வகைகள் இரண்டு, கறிவேப்பிலை அல்லது இஞ்சித் துவையல், வடை(உளுந்து), அப்பம் அல்லது அதிரசம் (அவரவர் வீட்டு வழக்கப்படி) ஆகியவை பொதுவாகச் செய்வது வழக்கம்.
இவற்றோடு, வாழை, மா, பலா ஆகிய பழவகைகளில், எல்லாவற்றையுமோ அல்லது கிடைப்பவற்றையோ போடலாம். திராட்சையும் போடலாம். இப்போது, ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் போடுகிறார்கள்.
பொதுவாக, இரண்டு பொரியல், கூட்டு (பிட்லை உள்பட) ஆகியவை செய்வது வழக்கம். சில வீடுகளில், நான்கு வித வெல்லக் கூட்டுகள் செய்கிறார்கள். உப்பு, இனிப்பு கோசுமல்லி, வறுவல், தேங்குழல் அல்லது உளுந்து அப்பளம்(புதிதாக இட்டு ஈரமாகப் பொரித்தது) போடுவதும், வேப்பிலைக் கட்டி, புதிதாகச் செய்த ஊறுகாயையும் போடுவதும், சில வீடுகளில் வழக்கமாக இருக்கிறது. இனிப்புப் பச்சடிக்கு பதிலாக, புளிப்பச்சடி போடுவதும் உண்டு.
அப்பம் அல்லது அதிரசத்திற்குப் பதிலாக, போளி, கோதுமை அல்வா,சுகியன் ஆகியவை போடுவதும் சில வீடுகளில் வழக்கத்தில் உள்ளது.
பிட்லையில் கத்தரிக்காய் தான் போடுவது வழக்கம். பொதுவாக, பாகற்காய் சேர்ப்பதில்லை.
கலந்த சாத வகைகளில், தேங்காய், எலுமிச்சை, புளியோதரை ஆகியவற்றில் இரண்டு வகை செய்வது வழக்கம். சில வீடுகளில், தயிர்சாதமும் செய்கிறார்கள்.
சிரார்த்த தினத்திற்கு மறுநாளோ அல்லது அதை ஒட்டியோ, சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதாக இருந்தால், எள்ளுருண்டை கட்டாயம் செய்ய வேண்டும். விசேஷங்களை ஒட்டிச் செய்வதாக இருந்தால் பொதுவாக, எள்ளுருண்டை சேர்ப்பதில்லை. மேற்கூறிய யாவற்றையும், அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு செய்து கொள்ளவும்.
புடவையைக் கொசுவம் வைத்து, அலங்கரித்து வழிபடும் முறை:
இதற்கு, அழைக்க வேண்டிய சுமங்கலிகள் உள்ளூரில் இருந்தால், மஞ்சள், குங்குமம், நல்லெண்ணை, சீயக்காய், வாசனைப்பொடி இவற்றோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை மணையில் அமர்த்தி, குங்குமம் இட்டு, மஞ்சள் முதலியவைகளைக் கொடுத்து, 'எங்கள் இல்லத்தில், பெண்டுகளுக்கு வந்து, பெரியவர்களாக இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்' என்று கூறி நமஸ்கரிக்க வேண்டும். இதற்கு, 'சுமங்கலிப் பெண்டுகளை வரிப்பது' என்று பெயர். அவர்கள், மறுநாள் வீட்டுக்கு வந்து குளிப்பதாக இருந்தால், குங்குமம் வைத்து அழைத்து விட்டு வந்து விடலாம். மறுநாள் வீட்டுக்கு வந்ததும், எண்ணை சீயக்காய் ஆகியவற்றைக் கொடுக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், முதல் நாளே, அவர்கள் உடுத்த வேண்டிய ஒன்பது கஜம் புடவையை வாங்கி வந்து விட வேண்டும். மறுநாள் காலையில் நனைத்து உலர்த்த சௌகரியமாக இருக்கும்.
அழைக்க வேண்டிய சுமங்கலிகள் வெளியூரில் இருந்தால், பெண்டுகள் தினத்தன்று காலையில், வெளியூரிலிருந்து வந்தவர்களை வரிக்கலாம்.
சுமங்கலிப் பிரார்த்தனை தினத்தன்று அதிகாலையில், பூஜை அறையில் விளக்கேற்றி, புடவைக்கலத்திற்கென்று வாங்கியிருக்கும் புடவை, ரவிக்கைத் துணியை, கோலம் போட்ட மணையில், ஒரு தட்டு அல்லது தாம்பாளத்தின் மீது வைக்க வேண்டும். மடிப்பைக் கலைத்து விட்டு, சுமாராக மடித்து வைக்கலாம். புடவைத் தலைப்பின் நுனி சற்று வெளியில் இருக்க வேண்டும் (எண்ணை வைக்க).
ஒரு தட்டில், எண்ணை, சீயக்காய், மஞ்சள், குங்குமம், வாசனைப்பொடி இவற்றை வைக்க வேண்டும். மற்றொரு தட்டில், அட்சதை, புதிதாகக் கரைத்த வாசனை சந்தனம், வெற்றிலை பாக்கு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.
பிறகு, வீட்டுக்கு மூத்த சுமங்கலிப் பெண்மணி, மணையில் வைத்திருக்கும் புடவைத் தலைப்பின் நுனியில், மூன்று சொட்டு எண்ணை வைக்க வேண்டும். பிறகு, புடவையின் மேலாக, மஞ்சள், வாசனைபொடி இவற்றைத் தூவி, குங்குமம் வைத்த பின், அட்சதை, கரைத்த சந்தனம் இவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாகக் கூறி, 'எல்லோரும் வந்து, பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி, அட்சதையைப் பரவலாகப் புடவையின் மீது தெளித்து, நமஸ்கரிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு, வீட்டு மருமகள்கள் ஒவ்வொருவராக நமஸ்கரிக்க வேண்டும். வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயர் தெரியாவிட்டால், 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி நமஸ்கரிக்கலாம்.
யாருக்கு புடவை கொடுக்கப்பட இருக்கிறதோ, அந்தப் பெண்ணை முதலில் மணையில் அமர்த்தி, அவருக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து, உச்சந்தலையில், மூன்று முறை எண்ணை வைக்க வேண்டும். எண்ணை வைப்பவர், தன் இரு கட்டை விரல்களை மட்டும் உபயோகித்து எண்ணை வைக்க வேண்டும். சிலர் வலக்கை மூன்று விரல்களாலும் எண்ணை வைப்பார்கள். பிறகு, அவருக்கு, எண்ணை, சீயக்காய் பொடி, வாசனைப் பொடி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பிறகு, மற்ற பெண்களுக்கு எண்ணை வைக்கலாம். இவ்வாறு வைப்பதை, வீட்டு மருமகள்கள் செய்ய வேண்டும்.
புடவைக் கலப் புடவையை, நனைக்கும் போது, முதலில், தலைப்பை விட்டு நனைக்க வேண்டும். தலைப்பு கிழக்கு நோக்கி இருக்குமாறு உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது, கவனமாக உலர்த்த வேண்டும். கம்பிகளில் புடவை சிக்கி விடக் கூடாது. தரையில் அல்லது கைப்பிடிச் சுவரில் உலர்த்துவதானால், அது சுத்தமாக இருக்க வேண்டும். துளி ஈரம் இல்லாமல் புடவை காய வேண்டியது முக்கியம். ரவிக்கைத் துணியையும் உடன் உலர்த்த வேண்டும்.
பிறகு, அழைத்திருக்கும் பெண்களின் புடவைகளை எல்லாம் (வாங்கி வந்திருந்தால்) நனைத்து உலர்த்த வேண்டும். வீட்டு மருமகள்கள் உடுத்த வேண்டிய புடவைகளையும் உலர்த்த வேண்டும். சில வீடுகளில், வீட்டு ஆண்களின் உடைகளையும் நனைத்து உலர்த்துகிறார்கள். பெண்டுகள் தினத்தன்று காலையில் இவ்வாறு உலர்த்துவது தான் சிறப்பு. முன் தினம் செய்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
வீட்டு மருமகள்கள் உட்பட எல்லோரும் எண்ணைக் குளியல் செய்வது அவசியம். குளித்து விட்டு, உலர்த்தி வைத்திருக்கும் உடைகளை அணிய வேண்டும்.
வீட்டில், சுமங்கலிகளை உட்கார்த்துவதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் அறை அல்லது ஹாலை இருமுறை துடைக்க வேண்டும். கிழக்குப் பார்த்த இடமாகத் தேர்ந்தெடுத்து, அங்கு சற்றுப் பெரிதாக மாக்கோலமிட்டு, பெரிய பலகையைப் போட்டு அதற்கும் கோலமிட வேண்டும்.
சுமங்கலிகளை உட்கார வைக்கும் இடத்தில், சின்ன சின்ன மாக்கோலமிடவேண்டும். எல்லாக் கோலத்திற்கும் காவி இட வேண்டும். புடவைக் கலமும் அதன் அருகில், அதை வாங்கிக் கொள்பவர் சாப்பிடும் இடமும் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். மற்ற பெண்கள் இலை, கிழக்கு, மேற்காக இருப்பது சிறப்பு. வடக்குப் பார்த்தும் இருக்கலாம்.
பலகையில் மாக்கோலம் காய்ந்ததும், அதன் மேல் உலர்ந்த புடவைக்கலப் புடவையை கொசுவி வைக்க வேண்டும். அதாவது, புடவையைக் கொசுவம் வைத்து, தலைப்பால், கொசுவத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, அதன் மேல் ரவிக்கைத் துணியைக் கட்டி, ஒருவர் அமர்ந்திருப்பது போல் மணையின் மேல் வைக்க வேண்டும். அதற்கு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். மஞ்சள் பொடியைப் பிசைந்து, மூக்கு போல் செய்து, அதை புடவையின் மேற்புறத்தில் வைத்து, அதில், மூக்குத்தி வைக்க வேண்டும். தங்கச் சங்கிலி, இயன்ற ஆபரணங்கள் சாற்றி, பூமாலைகள் சாற்ற வேண்டும். இரட்டை மாலையாக சாற்றுவது சிறப்பு. மல்லிகை போன்ற வாசனை மாலைகளையே சாற்ற வேண்டும்.
புடவையின் பின்னால், கண்ணாடி ஒன்றை வைத்து, அதற்கும், பொட்டு வைத்து, பூச்சரம் சாற்றலாம். கலத்தின் இருபுறமும், ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றவும். எல்லாம் நிறைவடையும் வரை விளக்கு எரிவது அவசியம்.
கலத்தின் அருகில், செம்பு அல்லது பாத்திரங்களில், பானகம், நீர்மோர், ஆகியவற்றைக் கரைத்து வைக்க வேண்டும்.
சுக்கு வெல்லம் இரண்டையும் சேர்த்து தட்டி, பிசைந்து உருண்டை செய்து ஒரு தட்டில் அதை வைத்து, அதையும் கலத்தின் அருகில் வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பாக நடத்தும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், மணமகளின் புடவை, நகைகள் முதலியவற்றையும் கலத்தின் முன் வைக்கிறார்கள்.
ஒரு தட்டில் மஞ்சள் பொடியைப் பிசைந்து கொள்ளவும். பிசைந்ததில் கொஞ்சம் எடுத்து, எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில், சின்னச் சின்ன மஞ்சள் உருண்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும். மீதியை நலங்கு இட வைத்துக் கொள்ளலாம். நலங்கு (மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்தது) தயார் செய்யவும்.
பூச்சரத்தில், தாம்பூலத்திற்குக் கொடுக்க நறுக்கி வைத்துக் கொண்டு, அது தவிரவும் , சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதைக் கால் அலம்பிய பின் கொடுக்க வேண்டும். தாம்பூலம் கொடுக்கத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில், சாப்பிட்ட பின் போடுவதற்கு, வாசனைப் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து வைக்கவும். பானகம், நீர்மோர் கொடுக்க , சின்ன டம்ளர்கள் எடுத்து வைக்கவும்.
புடவைக் கலத்திற்கு அருகில், ஒரு தட்டில், வெற்றிலை பாக்கு, பழங்கள், சந்தனம், குங்குமம் அட்சதை, ஊதுபத்தி அல்லது சாம்பிராணி,ஒரு தட்டில் கற்பூரம் (கொஞ்சம் பெரிய கட்டியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால், பக்கத்தில் கொஞ்சம் கற்பூரம் வைத்துக் கொண்டு சேர்த்துக் கொண்டு வரலாம்).
ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைக்கவும்.
உதிரிப்பூக்களையும் ஒரு தட்டில் வைக்கவேண்டும். மேற்கூறியவை, கலத்தின் அருகில் இருக்க வேண்டும். கலத்தின் முன்பாக இலை போடுவதால், அருகிலேயே தான் வைக்க வேண்டும்.
இவை எல்லாம் செய்த பின்னரே, சுமங்கலிகளை அழைக்க வேண்டும். அவர்களைக் காக்க வைக்கக் கூடாது.
அழைத்திருக்கும் பெண்கள் (பெண்டுகள்) அனைவரும் குளித்துத் தயாரான பின், ஒவ்வொருவரையும் அமரச் செய்து, சந்தனம் குங்குமம் தரவும். பின், சின்ன உருண்டைகளாக்கி வைத்திருக்கும் மஞ்சளைக் கொடுத்து, கால்களில் பூசி அலம்பி வரச் சொல்லவும். சிறு துண்டுகளாக்கி வைத்திருக்கும் பூச்சரம் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொல்லவும்.
கலத்தின் முன்பும், சாப்பிடும் இடத்தில் போட்டிருக்கும் கோலங்களின் மேலும், இலை போட்டு பரிமாற வேண்டும். கலத்தின் முன் இரட்டையாக நுனி வாழை இலை போடவேண்டும். மற்றவர்களுக்கு ஒற்றை இலை போடலாம். சில வீடுகளில் அனைவருக்குமே இரட்டை இலை போடுவார்கள். முதலில், அன்ன சுத்தியாக, சிறிது நெய் விட்டு விட்டு, பரிமாற ஆரம்பிக்கவும். முதலில் கலத்திற்கு பரிமாறி விட்டே, மற்ற இலைகளுக்குப் பரிமாற வேண்டும். முடிக்கும் போது தெற்கே முடிக்காமல் மற்ற திசைகளில் முடிக்கவும். அதற்குத் தகுந்தாற்போல் இலை போட வேண்டும்.
எல்லாம் பரிமாறி, கொஞ்சம் அன்னமும் பரிமாறி, மீண்டும் கொஞ்சம் நெய் ஊற்றிய பின், பெண்டுகளை, வீட்டு வராந்தாவிலோ அல்லது சாப்பிடும் ஹாலின் வெளியேயோ(சௌகரியப்படி) நிற்க வைக்க வேண்டும்.அவர்கள் நிற்கும் இடத்தின் முன்பாக, கதவுகள் இருக்க வேண்டியது அவசியம். பின், கதவை மூடி விட்டு, வீட்டு மருமகள்கள், கைகளைத் தட்டி, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும். நிறைவாக, 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி விட்டு, கதவைத் திறந்து விடவும். அனைவரையும் உள்ளே வந்து அமரச் சொல்லவும்.
சில வீடுகளில், பரிமாறும் முன்பே, பெண்டுகளை வெளியே நிற்க வைத்து, கதவுகளை மூடிவிட்டு, பின் பரிமாறி முடித்து, அதற்குப் பிறகு கைகளைத் தட்டி அழைப்பார்கள். சில வீடுகளில், கலத்திற்குக் கற்பூரம் ஏற்றிய பின்பே பெண்டுகளை அமர்த்துவதும் வழக்கமாக இருக்கிறது.
பெண்டுகள் எல்லோரும் வந்து அமர்ந்த பிறகு, வீட்டு மருமகள்களில் மூத்தவர், அல்லது மாமியார், புடவைக் கலத்திற்கு, சந்தனமும் அட்சதையுமாகக் கரைத்துத் தெளித்து விட்டு, பின் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி ஏற்றி, காண்பிக்க வேண்டும். அதன் பின், இலையில் உள்ளதை நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றி, முதலில் கலத்திற்கு சுற்றிக் காண்பித்து விட்டு, அமர்ந்திருப்பவர்கள் முன்பாகக் காட்டவும்.அதன் பின், கற்பூரத்தை கலத்தின் முன் வைத்து, நீர் சுற்றி, பூ, அட்சதையும் சுற்றிப் போட்டு வணங்கவும். அதற்கு பின், தட்டை எல்லோருக்கும்(பெண்டுகள் உட்பட) காட்டி கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொல்லலாம்.
வீட்டில் இருப்போர்(ஆண்களும்) அனைவரும், பூ, அட்சதை போட்டு கலத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன் பின், கலத்திற்கு ஆரத்தி எடுத்து விட்டு, பெண்டுகளுக்கும் காண்பிக்கவும். அவ்வாறு செய்யும் போது, வீட்டில் யாராவது ஐந்து மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் அவர்கள் நிற்கக் கூடாது.
பஞ்சபாத்திர உத்திரிணியில் நீர் எடுத்து, முதலில் கலத்தில் சிறிதளவு நீர் விட்டு, அதற்கு பின், பெண்டுகள் அனைவரையும் ஒன்று போல் கை நீட்டச் சொல்லி, நீர் வார்க்கவும். இதற்கு தத்தம் குற்றுவது என்று சொல்வார்கள்.
வீட்டின் மூத்த மருமகளோ அல்லது மாமியாரோ தான் இதைச் செய்வது வழக்கம். பெண்டுகள், அந்த நீரால் இலையைச் சுற்றிய பின் சாப்பிடச் சொல்லவும். இவ்வாறு தத்தம் குற்றும் வேளை, ராகு காலம் இல்லாமல் இருக்க வேண்டும். 'இருந்து நிதானமாகச் சாப்பிடுங்கள்' என்று சொல்லவும். இலையைப் பார்த்துப் பரிமாறவும். கேட்கும் வரை வைத்துக் கொள்ளக் கூடாது. 'எல்லாம் ருசியாக இருக்கிறதா?' என்று கேட்பது சரியல்ல.
சாப்பிட்டு முடித்த பின், கலத்திற்கு உத்தரா போஜனத்திற்காக நீர் வார்த்து விட்டு, பெண்டுகளை இடது கையை நீட்டச் சொல்லி நீர் வார்க்கவும். பின் மீண்டும் வலக்கையில் நீர் விட்டு அருந்திய பின், கை அலம்பச் சொல்லி உபசரிக்கலாம்.
அதன் பின், அனைவரையும் பாய் அல்லது ஜமக்காளம் விரித்து அமரச் சொல்லி, பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம் ஆகியவற்றைத் தரவும். ஒவ்வொருவர் கால்களிலும், பிசைந்த மஞ்சளைப் பூசி, நலங்கு இடவும், சந்தனம், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் தரவும். இவ்வாறு செய்யும் போது, கலத்திற்கும் துளித் துளி, பானகம் நீர் மோர் ஊற்றி, தாம்பூலத்தில் ஒரு செட் வைக்க வேண்டும். பிறகு அனைவரையும் வரிசையாக நிற்கச் சொல்லி, அட்சதை தந்து, வீட்டில் உள்ளோர் அனைவரும் நமஸ்கரிக்கவும். அவர்கள் கையில் தரும் அட்சதையிலேயே கொஞ்சத்தை தனியாக வாங்கி பத்திரப்படுத்தி வைத்தால், பெண்டுகளுக்கு வர இயலாத உறவினர்களுக்கு அனுப்பச் சௌகரியமாக இருக்கும்
வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றைத் தந்து போட்டுக் கொள்ளச் சொல்லவும். வெற்றிலை போட்டு சிறிது நேரம் ஆன பின்பே பெண்டுகளுக்கு உட்கார்ந்தவர்கள் ஒன்பது கஜப் புடவையை மாற்றலாம். பெண்டுகளுக்கு அமர்ந்தவர்கள் இரவில் பலகாரம் தான் சாப்பிட வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடும் போது, புடவைக் கலத்தின் முன் வைத்த இலையை, சற்று வடக்குப் பார்த்து இழுத்து விட்டுவிட்டு, அந்த இலையை வீட்டு மருமகள்கள் சாப்பிட உபயோகிக்கலாம். இரு இலைகள் இருப்பதால் இருவர் சாப்பிடலாம். வீட்டு ஆண்களும் சாப்பிடலாம். அதில் இருக்கும் பிரசாதத்தை அனைவருக்கும் கொஞ்சம் போட்டு சாப்பிடச் சொல்லவும்.
எல்லாம் ஆனதும், சிறிது நேரம் கழித்து, மீண்டும் கலத்தின் முன் விளக்கேற்றி, புடவை வாங்கும் பெண்ணை மணையில் அமர்த்தி, சந்தனம் குங்குமம் கொடுத்து, கலத்திற்கு போட்ட மாலையைப் போட்டு, ஒரு தாம்பாளத்தில், கலத்தில் வைத்த புடவையையும், தாம்பூலத்தையும் தரவும். அவர் அதை அணிந்து கொண்டு வந்து பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். கலத்திற்கு போட்ட மாலையை, வீட்டில் திருமணமாகாத பெண் இருந்தால் அவளுக்குப் போட்டு ஸ்வாமியை நமஸ்கரிக்கச் சொல்லலாம். புடவை வாங்கும் பெண்ணுக்கு பூச்சரம் அணிவிக்கலாம்.
மேலே பொதுவான முறைகளே கூறப்பட்டிருக்கிறது. அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு தேவையான மாற்றங்களுடன் அனுசரிக்கவும்.புடவையை நனைக்காமல் அப்படியே வைக்கும் வழக்கம் இருந்தாலும் கூட, புடவைக் கலம் அலங்கரிக்கும் முறை மட்டும் மாறும். அதாவது, அப்படியே புதுப்புடவையை வைத்து, பூ,சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்றவை எல்லாம் மேற்கூறியவை போல் தான்.
பூவாடைப்பானை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால், பானைக்குள் வைத்த பாவாடை சட்டையை ஒரு கன்யாப் பெண் குழந்தைக்குத் தருவார்கள். மற்றபடி, பெண்டுகளை அழைப்பது, உணவளிப்பது எல்லாம் முன் சொன்னது போல் தான் செய்வது வழக்கம்.
பொதுவாக, வீட்டுப்பெண்ணின் திருமணம் என்றால் திருமணத்திற்கு முன்பாகவும், பிள்ளைக்குத் திருமணம் என்றால், திருமணம் முடிந்த பின், மருமகள் வீட்டுக்கு வந்த பின்பே சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
நம் குடும்ப வழக்கப்படி செய்யும் முன்னோர் வழிபாட்டு முறைகளை தவறாது அனுசரிப்பது, குடும்பத்தைக் காத்து வாழையடி வாழைய வளரச் செய்யும். ஆகவே, அவற்றைத் தவறாது அனுசரித்து, வெற்றி பெறுவோம்!