சத்து மாவு தயாரிப்பது எப்படி???

சத்து மாவு தயாரிப்பது எப்படி???


இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது.

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.

தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

6 மாதம் கெடாது

சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

ரமணரின் பொன்மொழிகள்

ரமணரின் பொன்மொழிகள்


1. மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாண்யை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

2. சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

4. கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

7. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

8. தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும்

ஒரு நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்.

ஒரு நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை. அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை. ஓய்வு வயதே இல்லாத முழு நேர பணியாகும் இது. ஆரம்ப காலங்கள் சற்று கடினமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். பொதுவாக ஆண்கள் என்பவர்கள் பழக்க வழக்கங்களால் நிறைந்தவர்கள். அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் இருந்து சற்று மாற்றி நடந்தாலும் கூட அது அவர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கும். இருப்பினும் ஒரு தந்தையாக மாறிய பிறகு உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு கிடையாது;
நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும். ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம். நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம். முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்….
1. கடைப்பிடிப்பதில் சீரற்ற தன்மை:
நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும், சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
2. கணிக்க முடியாத வகையில் இருப்பது:
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும். தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
3. தொழில்நுட்பத்துடன் ஒட்டியிருப்பது:
உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும். உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
4. எல்லைகள் இல்லாமல் இருத்தல்:
உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள். காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும் குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.
5. எப்போதும் இல்லை என கூறாமல் இருத்தல்:
உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள். அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.
6. எப்போதுமே பிஸியாக இருப்பது:
உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை. உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு தேவையான பண்பு இது.
7. அச்சுறுத்தல்:
உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.
8. தொடர்ச்சியான ஒப்பீடு:
உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.
9. செவி சாய்க்காமல் இருத்தல்:
குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.
10. ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களை கைவிடுதல்:
நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் குறைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றியை தீர்மானிக்கும் புத்தி ரேகை!

வெற்றியை தீர்மானிக்கும் புத்தி ரேகை!

உள்ளங்கையில் சில உண்மைகள்
உள்ளங்கையில் ஆயுள் ரேகைக்கு அடுத்ததாக தெரிந்துகொள்ளப்பட வேண்டியது, புத்தி ரேகை (Head Line). மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி, ஓர் உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவே ஆகும். இதையே பகுத்தறிவு என்றும், புத்திக்கூர்மை என்றும், விவேகம் என்றும் பல சொற்களால் குறிப்பிடலாம்.
மனித உடலில் புத்தி அல்லது அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்பு, மூளை. அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது தலை.ஒருவனது அறிவு, புத்திக்கூர்மை, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் (Head Line) அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆழமாக, தெளிவாக, நீண்டு அமைந்துள்ள புத்தி ரேகை, ஒருவரது சிறப்பான அறிவாற்றலைக் குறிக்கும். இந்த ரேகையின் அமைப்பு சரியாக இல்லாவிட்டால், அறிவாற்றல் குறையும். அதனால் வாழ்வில் வளர்ச்சியின்மையும், ஏமாற்றங்களும், தோல்விகளும் உண்டாகும்.
உள்ளங்கையின் நடுவில் ஆயுள் ரேகைக்கு மேலும், இருதய ரேகைக்குக் கீழேயும் புத்தி ரேகை அமையும் (படம்1). பெரும்பாலும் குரு மேட்டில் இருந்தோ, செவ்வாய் மேட்டில் இருந்தோ இந்த ரேகை ஆரம்பமாகும். இந்த வகைப்படி செவ்வாய் மேடு அல்லது குரு மேட்டில் தொடங்கி, நீண்டு அமைந்துள்ள புத்தி ரேகையை உடையவர்கள் தெளிவான அறிவாளிகள். சிறந்த உயர்கல்வியைப் பெறுவார்கள். கல்வியையும், அறிவாற்றலையும் பயன்படுத்தி, தொழில் செய்து பொருளீட்டி வாழ்க்கையில் உயர்வார்கள்.
சிலருக்கு உள்ளங்கையின் மையப்பகுதியில் இருந்தும் இந்த ரேகை ஆரம்பமாகலாம் (படம்2). ஆயுள் ரேகையோடு சேர்ந்தோ, அல்லது தனியாகவோ, புத்தி ரேகை அமையலாம்.
பொதுவாக புத்தி ரேகை கீழ்க்கண்ட வகைகளில் அமையும்.
1. ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ, அல்லது வெட்டிக்கொண்டோ உள்ளங்கையின் மறுபக்கம் வரை நீண்டு செல்லும் (படம்3). இந்த வகை புத்தி ரேகை உடையவர்கள் அறிவாற்றல் கொண்டவர்களாகவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவின் திறத்தினால் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
2. ஆயுள் ரேகையை, தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப்பகுதியோடு குட்டையான ரேகையாக இது முடிந்துவிடலாம் (படம்4). இத்தகைய ரேகையை உடையவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், உலக அறிவும், அனுபவ அறிவும் உடையவர்கள். கல்வி வாய்ப்புகள் தடைப்பட்டாலும், இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்கள்.
3. ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். (படம்5). இப்படியான புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.
4. ஆயுள்ரேகையின் ஆரம்பப் பகுதியைத் தொடாமல், சற்றுத் தள்ளி ஆரம்பித்து நீளமாகவோ, குட்டையாகவோ, கிளைகளாகவோ பிரிந்தும் புத்தி ரேகை செல்லலாம் (படம்6). இவ்வகையிலான புத்தி ரேகை அமைந்தவர்கள் அறிவாற்றலும், விவேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைச் சம்பவங்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் சற்று குறையும்; அனுபவபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் அதிகரிக்கும். இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகளும் அதிகம் உண்டு.
5. புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பிக்காமல், இருதய ரேகை ஆரம்பமாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக்கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால் (படம்7), உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். கல்வியில் விருப்பம் குறைவு. எதையும் திட்டமிட்டு செயல்பட விரும்ப மாட்டார்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருப்பார்கள். இவர்கள் சாமர்த்தியமாக அறிவாற்றலை பயன்படுத்தும்போது விவேகியாகவும், உணர்ச்சி வயப்படும்போது உணர்ச்சிபூர்வமாகவும் செயலாற்றுவார்கள். தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள் ஆகியோருக்கு இத்தகைய அமைப்பு இருக்கும்.
மேலே குறிப்பிட்ட ஐந்து வகைகளைத் தவிர, வேறு வித்தியாசமான அமைப்புகளும் உண்டு. அவை பற்றியும், புத்தி ரேகையின் கிளைகள், அந்த ரேகையை குறுக்கிடும் வேறு ரேகைகளால் உண்டாகும் விளைவுகள், புத்தி ரேகையின் மீது அமைந்துள்ள குறியீடுகளால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் தெளிவாக அறிவது அவசியம்.
* புத்தி ரேகை, குரு மேட்டில் இருந்து ஆரம்பித்தாலும் அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை குரு மேட்டை நோக்கிச் சென்றாலும் புத்திசாலியாகவும், திட்டமிட்டு செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, எழுத்துத் திறமை, கலைத் திறமை, சிறப்பான வாழ்க்கை அமையும்.
* புத்தி ரேகை சனி மேட்டை நோக்கி வளைந்திருந்தாலோ, அல்லது ஒரு சிறிய ரேகை சனி மேட்டை நோக்கிச் சென்றாலோ திறமை, அறிவு ஆகியவற்றுடன் ஆணவமும், அதிகாரப் பற்றும் மிகுந்திருக்கும். பொருளீட்டும் தன்மையும் மேலோங்கி நிற்கும். தானே எல்லோரிலும் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருக்கும்.
* புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகையிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்8) தெளிவான புத்திமானாகத் திகழ்வார்கள். கல்வி கலைகளில் சிறந்தவராகவும், புகழ் பெற்றவராகவும், நீதிமானாகவும் திகழ்வார்.
* புத்தி ரேகையின் கடைசிப் பகுதி, புதன் மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்9) தொழில் வியாபாரத்திலும், அறிவாற்றலால் பொருளீட்டுவதிலும் திறமை அதிகமாக இருக்கும்.
* புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையிலிருந்து கிளை ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்10) கலைகளில் ஈடுபாடு, சிறப்பான தொழில் கல்வி, வெளிநாட்டு பயணம், பெண்களால் மதிக்கப்படுதல், அகங்கார குணம் ஆகியன அமையும்.
* புத்தி ரேகை செவ்வாய் மேட்டில் முடிவடைந்தாலும், அல்லது கீழ் செவ்வாய்மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது ஒரு சிறிய ரேகை கீழ் செவ்வாய்மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்11) தெளிவில்லாத அறிவு, திறமைக் குறைவு, அறிவைத் தவறாகப் பயன்படுத்துதல், முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம் ஆகிய பலன்கள் உண்டு.
* இரண்டு புத்தி ரேகைகள் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லுமானால் (படம்12) உலகம் போற்றும் அறிவாற்றலும் அதிர்ஷ்டமும், எதிர்பார்க்காத வெற்றிகளும் உண்டாகும்.
* துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பம், தொடர் தோல்விகள் உண்டு.
* குரு மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், தெளிவில்லாத புத்தி, குறுகிய காலத்துக்கு புத்தி பேதலித்தல், ஒரு முடிவு எடுக்கமுடியாத குழப்ப நிலை ஆகிய பலன்கள் உண்டு.
* சனி மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால் விபத்துகளால் மூளை பாதிப்பு ஏற்படும்.
* சூரிய மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், புத்திசாலித்தனமும், வெற்றி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும்.
* புதன் மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், மூளை பாதிப்பு, அகால மரணம் சம்பவிக்கலாம். நோயால் துன்பம் உண்டு.
* புத்தி ரேகை இருதய ரேகையை குறுக்கிட்டு சென்றால், கோழையாக வாழ்வார்கள்.
* புத்தி ரேகையின் முடிவில் பல கிளைகளாகப் பிரிந்து வலை போன்று காணப்பட்டால், பொய் பித்தலாட்டங்களில் நாட்டம் உண்டாகும்.
இனி, புத்தி ரேகையில் உள்ள குறியீடுகளுக்கான பலன்கள் குறித்து அறிவோம்.
சிவப்பு அல்லது வெண்புள்ளி: வெற்றியும் புகழும் கிட்டும்
கறுப்புப் புள்ளிகள்: தவறான முடிவுகள், குற்றங்களில் ஈடுபாடு
உண்டாகும்.
பெருக்கல் குறி: குறுக்குப் புத்தி உண்டு, விபத்துகளும் தலையில் காயங்களும் ஏற்படும்.
நட்சத்திரக் குறி: குழப்பம், தோல்வி தரும் சிந்தனைகள்.
சிறு வட்டம்: செயலில் இறங்கியபிறகு சிந்திப்பவர்கள்.
சிறிய முக்கோணம்: சரிபட செயல்படாமல் நஷ்டம் ஏற்படும்.
ரேகையின் இறுதியில் சதுரம் அல்லது முக்கோணம்: வெளி நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுவார்.
ரேகையின் முடிவில் பெருக்கல் குறி: அவசர புத்தி செயல்கள்.
புத்தி ரேகைக்கான பலன்கள் பார்ப்பது குறித்து வேறுசில தகவல்களும் உண்டு. மற்ற ரேகைகளின் தன்மையைப் பற்றி ஆராயும்போது, இதற்கான விளக்கங்களும் தெளிவாகும்.
பொதுவாக ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவரது வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், செல்வம் செல்வாக்கு, பதவி, அதிகாரம், புகழ், குடும்ப வாழ்க்கை, ஆயுள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆயுள் ரேகையும், புத்தி ரேகையுமே நிர்ணயிக்கின்றன.

நல்லவர் உள்ளம் தீமை செய்யாது

நல்லவர் உள்ளம் தீமை செய்யாது

குருஷேத்திரப் போர் முடிந்தது. பீமனின் கதையால் தாக்கப்பட்ட துரியோதனன் சாகும் நி லையில் இருந்தான். அங்கு வந்த அஸ்வத்தாமன் துரியோதனனுக்கு மகிழ்ச்சி அளிக்க விரும்பினான்.
பாண்டவர்களின் பாசறைக்குள் நள்ளிரவில் நுழைந்து உப பாண்டவர்கள் ஐவரையும் கொன்றான். அவர்களின் தலையை எடுத்துவந்து துரியோதனனிடம் காட்டினான்.
ஆனால் துரியோதனனோ, மகிழ்ச்சி அடைவதற்கு பதில், " என் எதிரிகள் பாண்டவர்களே ! அவர்கள் மக்களாகிய உப பாண்டவர்கள் அல்ல. எதற்காக இந்தக் குழந்தைகளைக் கொன்றாய் ? " என்று வருத்தத்துடன் கேட்டு உயிரை விட்டான்.
தனது குழந்தைகள் ஐவரும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பாஞ்சாலி அழுது புலம்பித் துடித்தாள்.
பாஞ்சாலியைப் பார்த்து அர்ச்சுனன் " அன்பே ! நம் குழந்தைகளைக் கொன்ற அந்த அஸ்வத்தாமனின் தலையைக் கொண்டு வருகிறேன். இது என் காண்டீபத்தின் மீது ஆணை. அவன் தலையையே பாத்திரமாக வைத்து நம் குழந்தைகளை நீராட்டு " என்று வெஞ்சினம் கூறிப் புறப்பட்டான்.
அஞ்சி ஓடும் அஸ்வத்தாமனை அர்ஜுனன் துரத்திச் சென்று போரிட்டான் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. அஸ்வத்தாமன் எய்த அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போயின. தோற்ற அஸ்வத்தாமனை அர்ஜுனன் கொல்லவில்லை . கைற்றால் பிணைத்து தன் பாசறை நோக்கி
இழுத்து வந்தான்.
இதைப் பார்த்த கண்ணன் , " அர்ஜுனா ? இந்தக் கொடியவனை எங்கே இழுத்துச் செல்கிறாய் ? காண்டீபத்தின் மீது ஆணையிட்டு இவனைக் கொல்வதாகச் சபதம் செய்தாயே , என்ன ஆயிற்று ? தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றானே , இவனை இப்போதே கொல்வதே நீ இங்கு செய்ய வேண்டியது " என்றார்.
" கண்ணா ! நான் என்ன செய்வேன் ? என் மக்களைக் கொன்ற இவன் என் ஆசிரியரின் மகனாக அல்லவா இருக்கிறான் ? இவனைக் கொன்று என் ஆசிரியரின் குடும்பத்திற்கு எப்படித் துன்பத்தை ஏற்படுத்துவேன். அவரும் என்னைபோல மகனை இழந்த துன்பத்தில் துடிப்பாரே " என்றான் அர்ஜுனன் .
அஸ்வத்தாமனை இழுத்து வந்து பாஞ்சாலி முன் நிறுத்தினான் அர்ஜுனன்.
தலை கவிழ்ந்தபடி நின்ற அஸ்வத்தாமனின் நிலையைக் கண்டு பாஞ்சாலி உள்ளம் இளகியது.
" என் குழந்தைகளைக் கொன்ற பெரும்பாவி இவன். ஆனால் இவனைக் கொன்று நாம் குருத் துரோகத்திற்கு ஆளாக வேண்டாம். நான் குழந்தைகளை இழந்து தவிப்பதைப் போல , நம் குருவின் மனைவியும் தவிக்க வேண்டாம். இவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடுங்கள் " என்றாள் பாஞ்சாலி.
விடுதலைப் பெற்ற அஸ்வத்தாமன் தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றான்.

பணவரவு உண்டாக லக்ஷ்மி வசிய கலசம்

பணவரவு உண்டாக லக்ஷ்மி வசிய கலசம்

நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ
இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற வாழ்த்துக்கள.

கடன் தீர்க்கும் காஞ்சி முருகன்

கடன் தீர்க்கும் காஞ்சி முருகன்

திருவண்ணாமலை அடுத்த செய்யாற்றங்கரையில் திருக்காஞ்சி என்ற இக்கிராமத்தில் உள்ள குன்றின் மீது திருநீலகண்ட பருவத பாலசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வள்ளி, தெய்வாணை சமேதராக முருகர் காட்சி கொடுக்கிறார்.
இக்கோயிலில் இரண்டு முருகர் சன்னதிகள் உள்ளது தான் சிறப்பம்சமாகும் :கோயில் ஒன்று - சன்னதி இரண்டு!
இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், தனது நேர்த்திக்கடன் நிறைவேறினால் இதே குன்றின் மீது பாலமுருகன் சன்னதியை அமைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி வேண்டுதல் நிறைவேறி, மூலவர் சன்னதிக்கு முன்பு ஸ்ரீ பாலமுருகன் கோயிலை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
மூலவர் சன்னதிக்கு வலது பக்கத்தில், விநாயகர், சிவன், பார்வதி சன்னதியும், இடதுபுறத்தில் உற்சவ மூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பு மயில் வாகன மண்டபமும் உள்ளது. கோயிலுக்கு முன்பு 60 அடி உயரத்தில் ராஜகோபுரம் பொதுமக்களால் கட்டப்பட்டுள்ளது.
இக்குன்றுக்கு அருகில் உள்ள 450 அடி உயரமுள்ள குன்றில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளதால், தனிச்சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயராக கருதி, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தல வரலாறு:
சுந்தரசாமி என்பவர் சிறுவயதிலேயே தனது ஊரைக் கூட அறியாமல், வீட்டை விட்டு காஞ்சி கிராமத்துக்க வந்துள்ளார். அங்குள்ள சின்னைய முதலி என்பவரது வீட்டில் வேலைக்காக சேர்ந்தார். அவரை, சித்தரை மாத வெயிலில் தானியத்தை காவல் காக்கச் சொல்லியுள்ளனர். அப்போது அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நிழல் தருவதற்காக ஒரு பெரிய மரம் உண்டானதாகவும், அன்றிலிருந்து அவர் தெய்வ பக்தியும், ஞான சித்தியும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து சின்னைய முதலியும், சுந்தரசாமிக்கு சீடனாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் சுந்தரசாமி எண்ணப்படி, இக்குன்றின் மீது சின்னையன் கோயிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, திருவண்ணாமலை ஈசான்ய மடாதிபதியாக இருந்த கணபதி சாமிகள், இக்கோயிலுக்கு வந்து 30 ஏக்கர் நிலங்களை பெற்று, நித்யகால பூஜை செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள ஒருவர் சனீஸ்வரர் கோயிலை அந்நாட்டில் அமைக்க விரும்பினார். பின்னர் மலேசியாவில் கோயில் அமைப்பதைவிட தமிழகத்தில் அமைப்பதுதான் தெய்வீகம் என நினைத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களையெல்லாம் சுற்றிப்பார்த்ததாகவும், ஆனால் அவரது மனம் எந்த கோயிலிலும் ஈர்க்கப்படவில்லை என்றும், பின்னர் காஞ்சி கோயிலுக்கு வந்த அவர், சனீஸ்வரர் கோயில் அமைப்பது பற்றி ஊர்மக்களிடம் பேசி, அதன்படி காஞ்சி குன்றின் மீது சனீஸ்வரர் சன்னதியை அமைத்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்சச்கள் :
மாதந்தோறும் கிருத்திகை அன்று சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை பூஜை நடைபெறும். இரவு உற்சவர் கிரிவலம் வருவார்.
விசேஷ கிருத்திகை : ஆடி கிருத்திகை இங்கு மிகவும் விஷேகமாக கருதப்படுகிறது. பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி அலகு குத்தியும் தேர் இழுத்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர்.
தை கிருத்தகை: கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த கார்த்திகை கிருத்திகை, தை கிருத்தகை இங்கு விசேஷமான நாளாகும். கார்த்திகை கிருத்திகை அன்று சொக்க பானை எறிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பரிகாரம் : கடன் தீர்க்கும் திருத்தலமாகவும், திருமண தடை, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல் இங்கு வந்து முருகனிடம் முறையிட்டால் முடியாதது இல்லை என்று சொல்லப்படும் அளவிற்கு முருக பெருமான் வாரி வழங்கி வருகிறார். வாருங்கள்; வந்து அருளை பெற்றுச் செல்லுங்கள்.
கந்த சஷ்டி விழா : ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. கந்த சஷ்டி அன்று காலை பாலாபிஷேகமும், அன்று மாலை நவபாகு தேவர்கள் (9 பேர்கள்) சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மறுநாள் தெய்வாணை அம்மாள் திருமணம் நடைபெறுவது இக்கோயிலின் தனி சிறப்பு ஆகும். மறுநாள் காலை மயில் வாகனத்தில் சுவாமி திருமணக்கோலத்தில் வீதியுலா வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ஆலய தொடர்புக்கு, நிர்வாகி, முருகானந்தம் 9865554420 / 9790372120
அமைவிடம் : திருவண்ணாமலையிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் காஞ்சி முருகர் கோவில் அமைந்துள்ளது

100 ஹெல்த்தி ஹேபிட்

100 ஹெல்த்தி ஹேபிட்



அனைவரும் கடைபிடிக்க வேண்டியஆரோக்கியமான 100 பழக்க வழக்கங்கள் !

‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா... அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ... அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ... அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ... அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.

ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் எனப் பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பழக்கங்கள் என்னென்ன... வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன... நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.

தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெளியில் செல்லும்போது ஷூ, ஸ்லிப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால்தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவதுதான் நாகரிகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை இன்றி வைத்துக்கொண்டிருக்கிறோம். சிலர், `வீட்டில் குழந்தைகள் அதிகமாக டி.வி பார்க்கின்றனர்’ எனப் புகார் சொல்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன... கவனம் இல்லாமல், விழிப்புஉணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன...
நகங்களைக் கடிப்பது

1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.

2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.

3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)

கால் மேல் கால் போட்டு அமர்வது

4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சில ஆய்வுகள் ‘இதயம் தொடர்பான பிரச்னைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்’ என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்னை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கலாம்.
நெட்டி முறிப்பது

6.டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிக்கும்போது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்துவரும்போது, மூட்டுப் பிரச்னைகள்கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

7. இரவில், விளக்குகளை அணைத்துவிட்டு செல்போன் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களைப் பாதிக்கலாம். மேலும், இது தூக்கத்தையும் கெடுக்கும்.

தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில்தான். சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல்போகலாம். இந்த ஹார்மோன் சுரப்புப் பிரச்னை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.

8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃபுல் வாலட்

10. ஆண்களுக்கு, பர்ஸை எப்போதும் பின்பக்கம் வைக்கும் பழக்கம் இருக்கும். பெரும்பாலானோர், பர்ஸை ஏதோ பேப்பர் மூட்டைபோல வைத்திருப்பர். அதில் பணத்தைவிட கார்டுகளும் பில்களுமே அதிகமாக இருக்கும். தடிமனான பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி, மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமரும்போது, உடலின் அமைப்பு (பாஸ்ச்சர்) பாதிக்கப்படும். அதாவது, ஒரு பக்கம் மட்டும் சில செ.மீ உயர்த்தப்பட்டிருக்கும். இப்படிக் கோணலாக அமர்வதால், முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்படும். கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் செய்தால், உங்கள் முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்படும்.

11. அமரும்போது, பின்புற பாக்கெட்டில் இருக்கும் சீப்பு, வாலட், கார்டு போன்றவற்றை டேபிள் மேல் வைத்துவிட்டு அமரலாம்.
ஸ்கின்னி ஜீன்ஸ்

12. பருவகாலத்துக்கு ஏற்ற உணவும் உடையும்தான் உடலுக்கு நல்லது. தமிழ்நாடு வெப்ப மண்டல பூமி. இங்கு, குளிர்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே. அப்போது தடிமனான ஆடைகளை அணியலாம். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. ஸ்கின்னி ஜீன்ஸ், பார்க்க அழகாக இருக்கும்; சிலருக்குக் கச்சிதமான தோற்றத்தைத் தரும். ஆனால், நீண்ட நேரம் இதை அணிந்துகொண்டிருப்பதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படும்.

13. உடலின் வியர்வையை உறிஞ்சும் தன்மைகொண்ட பருத்தி ஆடைகளை அணிவதுதான் சரி. உடலின் வியர்வையை அப்படியே தேக்கிவைத்து, காற்றுப் போகாமல் தடுக்கும் ஆடைகள் உடலின் கிருமிகளை அதிகமாக உருவாக்கும். அரிப்பு, சொறி போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம்.

அதிகப்படியான உடல்சூடு ஏற்பட்டு, சின்னச்சின்ன கட்டிகளும் உருவாகும். தொடைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எரிச்சல், வியர்வை, துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்ற அசெளகர்ய உணர்வுகளும் ஏற்படும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை உண்டாகும்.

14. அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள பகுதிகளுக்கு, காற்றோட்டமான உடையை அணிவதே சிறந்தது. அதுவும், பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளே சிறந்தவை.
கிரிப்பர் இல்லாத செருப்புகள்

15. தற்போது, கலர் கலராக பலவித செருப்புகள் குறைந்தவிலைக்குக் கிடைக்கின்றன. அவற்றில், சிலவகை செருப்புகளின் அடியில் மட்டுமே கிரிப்பர் டிஸைன்கள் இருக்கும். இவை, எந்தச் சூழலிலும் வழுக்காமல் இருக்கும்.

16. சில வகை செருப்புகளின் அடியில் கிரிப்பர் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும், இவற்றை வீட்டில் டாய்லெட் செருப்பாகப் பயன்படுத்துவர். கிரிப் இல்லாததால், சில சமயங்களில் இவை வழுக்கிவிட வாய்ப்பு உள்ளது. அவசர நேரங்களில் வேகமாக நடக்கும்போது, வழுக்கிவிட்டு கை, கால், தலையில் அடிபட நேரலாம்.

17. டாய்லெட் செருப்பு, வீட்டில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு, தோட்டத்தில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு என எந்தச் செருப்பாக இருந்தாலும், கிரிப்பர் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
எமோஷனல் ஈட்டிங்

18.ஸ்ட்ரெஸ், பதற்றமான உணர்வுகள் தோன்றும்போது தன்னை அறியாமல் அதிகம் சாப்பிட நேரிடும். டென்ஷன், கவலை, சோர்வான தருணங்களில் உணவின் அளவைக் கவனிப்பது நல்லது.

19. சிலர், அதிக டென்ஷன் எனச் சொல்லி, காபி குடிக்கச் செல்வார்கள். டென்ஷன் நாட்களில் 10 காபி, டீ குடிப்பவர்களும் உள்ளனர். இதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
வலி நிவாரணிகள்

20. தலைவலி, உடல்வலி என்றால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால், தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.

21. வலி என்பது நம் உடல் பிரச்னைக்கான அறிகுறியாகவோ, நம்முடைய சில தவறான பழக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது எனக் கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதைக்கு தீர்வு கிடைத்தால்போதும் என, பெயின் கில்லரைச் சாப்பிடக் கூடாது. சுய மருத்துவம் செய்துகொண்டால், நாளடைவில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.

22. தொடர் தலைவலி, வயிற்று வலி, முடி கொட்டுதல், அலர்ஜி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வந்தால், மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவும் நொறுக்குத்தீனியும்

23. மாலை வரைதான் நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும். இரவில் நொறுக்குத்தீனியைச் சாப்பிட்டால், செரிக்கத் தாமதமாகி, உடலின் உயிர் கடிகார சுழற்சி மாறுபடும். இதனால், நெஞ்சு எரிச்சல், ஏப்பம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம்.

உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலம், நொறுக்குத்தீனி சாப்பிட்ட பிறகு சுரக்கத் தொடங்கும். தூங்கும் நேரத்தில் உடல் செய்ய வேண்டிய வேலை பாதிக்கப்பட்டு, செரிப்பதற்கான வேலை உடலில் நடக்கும். எனவே, இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, நொறுக்குத்தீனிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம்

24. புகைப்பது உடலுக்குக் கேடு. ஒருவர் புகைத்துவிட்ட, புகையை மற்றவர்கள் சுவாசிக்கும்போது (பேசிவ் ஸ்மோக்கர்ஸ்) அவர்களுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பவரின் அருகில் நிற்பதுகூட கெடுதல்தான். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
புகைப்பவர்களுக்கும், பேசிவ் ஸ்மோக்கர்ஸ்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நெஞ்சுச்சளி, வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

25. புகைப்பதை நிறுத்துங்கள். நண்பர் புகைபிடிக்கும்போது, அந்த இடத்தில் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். புகைக்கும் எண்ணம் வரும்போது, பழச்சாறு குடிப்பது, ஸ்வீட் லெஸ் சூயிங்்கம் மெல்வது எனக் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.

26. கவனத்தை திசைதிருப்ப முடியவில்லை, மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது என்றால், தகுந்த மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

27. குடிப்பழக்கம் என்று சொல்வதே தவறு. குடி ஒரு பழக்கம் அல்ல நோய். `நான் சோஷியல் டிரிங்க்கர். எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்’ இப்படி, பல்வேறு காரணங்களைச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை குடித்தாலும், குடி என்பது தீமையானது என்பதே மருத்துவம் சொல்லும் உண்மை.

28. பீர் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, யூரிக் ஆசிட் அதிகரித்து கவுட் பிரச்னை ஏற்படும். கால் கட்டைவிரலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல்போகலாம். அதிகமாகக் குடிப்பவர்களின் கல்லீரல் பாதிப்பது உறுதி.

29. குடியை முற்றிலுமாகக் கைவிடுவதுதான் ஒரே தீர்வு. குடிப்பழக்கம் உள்ள நண்பர்களைச் சந்திக்காது இருப்பது, நேரத்துக்கு உணவு உண்பது நல்லது. தேவைப்பட்டால், மது மறுவாழ்வு கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.

காலாவதித் தேதியைக் கவனிக்காமல் இருப்பது

30. பொருட்களை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதிகளைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். காலாவதித் தேதிக்குப் பிறகு பயன்படுத்தும்போது, அதனால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

31. சிலர், எந்தப் பொருளை எடுத்தாலும் பெரிதாகத் தேர்ந்தெடுப்பார்கள். பவுடர், ஷாம்பு, காஸ்மெட்டிக் பொருட்கள் போன்றவை எல்லாமே பெரிய அளவில் இருக்கும். `இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை இல்லாமல் இருக்குமே’ என்று காரணம் சொல்வார்கள்.
நாளடைவில், அவற்றின் லேபிள் கிழிந்துபோகும். இதனால், காலாவதித் தேதி தெரியாமல்போகும். இதை அறியாமல், வருடக்கணக்கில் பவுடரைப் பூசுவதால் சரும அலர்ஜிகள் வரலாம்.

32. எந்தப் பொருளை வாங்கினாலும் காலாவதித் தேதியைக் கவனித்து வாங்குங்கள். காஸ்மெட்டிக் பொருட்களின் காலாவதித் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். காலாவதித் தேதி நெருங்கும் இரு மாதங்களுக்கு முன்னரே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

குளியல்

33.ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில், காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டியது அவசியம்.

34. சிலர், `கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளித்தால்தான் உடல் அலுப்புப்போகும்’ என நினைப்பார்கள். இது தவறு. இளஞ்சூடான நீரில் குளிப்பதே நல்லது. வெயில் காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலே உடல் வெப்பம் குறைந்துவிடும்.

35. அதிக வெப்பநிலையில் உள்ள வெந்நீரில் குளிப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

புறம்பேசுவது

36. மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சிப்பதோ நல்லது இல்லை. இது மனநலனைப் பாதிக்கக்கூடிய விஷயம். ஒருவரின் குணத்தையே அசைத்துப்பார்க்கும் பழக்கம். இதனால் மற்றவர்கள் நம்மைத் தாழ்வாக மதிப்பிடவும் வாய்ப்பு உண்டு. சமூக உறவு, மன அமைதி கெட்டு, மன அழுத்தம் அதிகரிக்கும்.

வாய்ப் பராமரிப்பு

37. காலையிலிருந்து எவ்வளவு உணவுகளை உண்டு ருசித்திருப்போம். தேவைப்படும்போது எல்லாம் நொறுக்குத்தீனி, காபி, டீ, ஜூஸ் எனப் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்போம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், இந்த உணவுத்துகள்கள் பற்களில் மாட்டி இருக்கலாம். இந்த உணவுத் துகள்கள்தான், பாக்டீரியா வளர ஏற்ற இடம். இதனால், பல் சொத்தை உள்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

38. வாய் துர்நாற்றத்தைப் போக்க, மவுத்வாஷ் பயன்படுத்துவதும் தவறு. பற்கூச்சம், ஈறு பிரச்னை எனப் பல காரணங்களுக்காக மவுத்வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டும்.

39. பலரும் மாதக்கணக்கில் ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். அது வளைந்து, நெளித்து பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

40. கடினமானதாக இல்லாமல், ஓரளவுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டும் அல்ல. ஒரு குழந்தையின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் செயல். குழந்தைகளுக்காகச் சேமித்துவைக்கப்படும் பொருளாதாரத்தைவிட, அவர்களுக்குச் சொல்லித்தரும் நற்பழக்கங்களினால், குழந்தையின் மன வளர்ச்சி செழுமையாக இருக்கும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் உதவும். வாழ்வாதாரச் சிக்கல்களைச் சிரமம் இன்றி எதிர்கொள்ள உதவும்.
நல்ல ரோல்மாடல் நீங்கள்தான்!

41. நூறு சதவிகிதம் பர்ஃபெக்டாக யாராலும் இருக்க முடியாது. ஆனால், குழந்தைக்கு முன் நல்ல ரோல்மாடலாக இருப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ‘ஐயோ! இன்னிக்குக் கீரையா? எனக்கு வேண்டாம்’ எனச் சொல்வதற்கு முன், அருகில் குழந்தை இருப்பதைக் கவனியுங்கள். `அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீரை பிடிக்கவில்லை. நாம் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, நாமே காரணமாக இருக்கக் கூடாது.

குழந்தையின் முன்னிலையில் விருந்தோம்பல்

42. வீட்டில் உறவினர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களைப் பற்றி குறை பேசுவதைக் குழந்தைகள் கவனித்தால், அவரின் மேல் மதிப்பு இல்லாமல்போகலாம். மேலும், விருந்தாளியை வரவேற்று உபசரித்து, முகத்துக்கு நேரே மரியாதை தந்துவிட்டு, சென்ற பின் அவரைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கத்தைப் பார்க்கும் குழந்தையும், இதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளும்.

இந்தக் குணம் அவர்களின் மனதில் பதிந்தால், நல்ல அப்பா, அம்மா என்பது நீங்களாக இல்லாமல்போகலாம். குழந்தைகள் முன் எதைச் செய்தாலும் அவற்றைக் கவனித்துச்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
43. விமர்சகராக நீங்கள் இருந்தால், விமர்சிக்கும் பழக்கமும் உங்களிடமிருந்தே குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளலாம். இதுவே, பின்னாளில் குழந்தைகள் புறம்பேசுவது, மற்றவர்களை விமர்சிப்பது, குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் காரணமாகலாம்.

கூடி வாழச் சொல்லிக்கொடுங்கள்!

44. அவசர உலகில் கூட்டுக் குடும்பம் என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. ஆனால், வருடத்துக்கு இருமுறையாவது உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் நேரம் செலவழிப்பது நல்லது. கூடியிருக்கும் தருணங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, பகிர்தல், அன்பு செலுத்துதல், உறவுகளின் மதிப்பு போன்றவற்றை குழந்தைகள் எளிதில் உணர, இது ஒரு வாய்ப்பாக அமையும்.

45. டி.வி., வீடியோ கேம், செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள். புதிய தொழில்நுட்பங்களைச் சிறு வயதிலே தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், அதுவே அவர்களின் உலகமாக மாறிவிடக் கூடாது. பின்னாட்களில் சிறு வயதில் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் இல்லாமல், தனித்து வாழப் பழகிக்கொள்ள நேரிடும்.

46. சாப்பிடும் முன்னர், சாப்பிட்ட பிறகு, மலம், சிறுநீர் கழித்த பிறகு கை கழுவ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தும்மல் வந்தால், கைகுட்டையால் மூட வேண்டும், பொது இடங்களில் மூக்கை நோண்டுவது, வாயில் கைவைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை பர்சனல் ஹைஜீனை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

டின்னர் டைம்... ஃபேமிலி டைம்!

47. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் நாம் இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவழிக்க இயலவில்லை. பலரும் அவர்களது குழந்தைகளுக்கு நேரத்தைக் கொடுக்காமல், பரிசுப் பொருட்களையும் நொறுக்குத்தீனிகளையும் வாங்கித் தருகின்றனர். உண்மையில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் முக்கியம். பரிசுப் பொருட்களோ, தின்பண்டமோ அதற்கு இணையாகாது.

48. பேசவோ, இணைந்து செயல்படவோ டின்னர் டைமை ஃபேமிலி டைமாக மாற்றிக்கொள்வது நல்லது. அன்றைய நாளில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இரவில் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் நடக்கும் விஷயங்கள்தான், அவர்களின் வாழ்க்கையையே வடிவமைக்கும்.

அதிகாலையில் எழும் பழக்கம்

49. காலையில் எழுந்திருப்பதுதான் இன்று நிறைய பேருக்கு முடியாத காரியம். சிறு வயதில் பழகத் தவறிவிட்டதால் ஏற்படும் சிக்கல் இது.

சிறு வயதிலிருந்தே ‘முன் தூங்கி முன் எழும்’ பழக்கத்தை மேற்கொண்டால், பெரியவர்களானதும் சோம்பலைத் தவிர்க்க முடியும். அதிகாலை எழும் பழக்கம், உடலுக்கு ஆரோக்கியத்துடன், மனதுக்கு அமைதியையும் தரும். உடலின் கடிகார சுழற்சி சீராக இயங்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.

விளையாட விடுவது

50. பெரியவர்களுக்கு எப்படி உடற்பயிற்சி செய்வது முக்கியமோ, அதுபோல் குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவசியம். மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் விளையாட்டு நல்லது. ஓடியாடி விளையாடும்போது அவர்களின் சிறு வயதிலேயே உடல்பருமனாக மாறுவது தடுக்கப்படும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

51. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

52.‘காலை உணவு கட்டாயம்’ என்ற விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும். காலை உணவில், மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம் போன்ற சமச்சீர் சத்துக்கள் இருப்பது, அந்த நாளின் தொடக்கத்தை உற்சாகமாக ஆக்கும். அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

53. காலையில் சாப்பிட்ட உணவில் கால் பங்கைக் குறைத்து, மதிய உணவாகச் சாப்பிடுங்கள். இரவு உணவை எளிமையாகச் சாப்பிடப் பழகுங்கள். பெரும்பாலும், இரவு உணவை சைவமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில், அசைவ உணவுகள் செரிக்கத் தாமதமாகும்.

54. வேலைசெய்யும் இடத்தில் உங்களுக்கு அருகில், ஒரு வாட்டர்கேனில் நீர் நிரப்பிவைத்துக்கொண்டு தேவைப்படும்போது நீர் அருந்துங்கள்.

55. ஜங்க் ஃபுட்டுக்குப் பதிலாக, ஹெல்த்தி ஃபுட்ஸை சாப்பிடப் பழகுங்கள். சிப்ஸுக்குப் பதிலாக நட்ஸ், சமோசாவுக்குப் பதிலாக சுண்டல் போன்ற மாற்றங்களைச் செய்யுங்கள்.

56. தினமும் நீங்கள் சாப்பிடுகிற உணவில், ஒரு கப் எக்ஸ்ட்ரா காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

57. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை என ஒவ்வொரு நிறத்தாலும் ஆன காய்கறிகளைக்கொண்டு பிளேட்டை வண்ணமயமாக்குங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்.

58. காபி, டீக்குப் பதிலாக சுக்கு காபி, மூலிகை டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, துளசி டீ, ஆவாரம் பூ டீ போன்ற ஹெல்த்தி சாய்ஸுக்கு மாறலாம்.

59. ஒரே நேரத்தில் அதிகப்படியாகச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, சின்னச் சின்ன மீல்ஸாகப் பிரித்து, ஐந்து அல்லது ஆறு வேளையாகச் சாப்பிடலாம். இதனால், அதீதப் பசி ஏற்படாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படும்.

60. அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. தோல் நீக்கப்பட்ட இறைச்சி, பதப்படுத்தப்படாத ஃப்ரெஷ் இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ‘ரெடி டு மேக்’ எனும் ரெடிமேட் மற்றும் உடனடியாகச் சமைக்கப்படும் இறைச்சிகளைத் தவிர்க்கலாம்.

61. இனிப்பான பொருட்களைச் சாப்பிடத் தோன்றினால், சாக்லேட், கேக் எனத் தேர்ந்தெடுக்காமல், கடலை உருண்டை, எள்ளுருண்டை, கருப்பட்டி, வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள்.

62. ஒன்பது மணிக்கு மேல் சமையலறையில் வேலைசெய்யவோ, உணவு தயாரிக்கவோ முடியாது என்ற விதிமுறையை அமல்படுத்துங்கள்.

63. சர்க்கரை, உப்பு போன்ற வெள்ளைப் பொருட்களுக்கு விடை கொடுத்துவிட்டு, நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, வெள்ளை அரிசிக்குப் பதிலாக கறுப்பு, பிரவுன், சிவப்பு அரிசி, பிராய்லர் கோழிக்குப் பதிலாக நாட்டுக்கோழி, வெள்ளை முட்டைக்கு பதிலாக நாட்டுக்கோழி முட்டை எனத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.

64. உணவை நன்கு மென்று ருசித்து, கவனித்து உண்ணும் பழக்கம் இன்று பெரும்பாலானோருக்குக் கிடையாது. ‘நேற்று இரவு என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்டால், எத்தனை பேரால் சொல்ல முடியும். பசி என்ற காரணம் இருப்பதால், அந்தந்த வேலைக்கு வயிற்றை மட்டும் நிரப்பிக்கொள்கிறோம். இனியாவது, உணவை ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்குவோம்.

65. எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவாகச் சாப்பிடுங்கள். அப்படி அளவாகப் பயன்படுத்தும் எண்ணெயும் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவை செக்கில் ஆட்டப்பட்டவையாக (Cold Pressed) இருப்பது நல்லது. தயாரிக்கும்போது மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படாத எண்ணெய், செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்தான் உடலுக்கு உகந்தது.

ஃபிட்னெஸ் பழக்கங்கள்

66. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நடப்பது ஆரோக்கியமான நற்பழக்கம். நடைப்பயிற்சி செய்வது போர் அடித்தால், இசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது, செருப்பு இல்லாமல் கூழாங்கற்களில் நடப்பது, ஒரு நாள் பூங்காவில் நடந்தால், மறுநாள் கடற்கரையில் நடப்பது எனச் சூழலை மாற்றிக்கொண்டே இருந்தால், நடைப்பயிற்சி என்பது பயிற்சியாக இல்லாமல் நடைப்பழக்கமாக மாறிவிடும். பயிற்சி என்பதுதான் கடினம், பழக்கம் என்று மாறிவிட்டால் அது அன்றாடச் செயலாக மாறிவிடும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரேக்!

67. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருக்கிறோம். அவ்வப்போது அந்த நிலையை மாற்றிக்கொள்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிடங்களுக்கு பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள்.

உடலுக்கு ஏதாவது அசைவுகளைக் கொடுங்கள். உட்கார்ந்து எழுந்திருப்பது, சோம்பல் முறிப்பது, அருகில் நடப்பது போன்ற அசைவுகளைக் கொடுத்தால், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

பயிற்சியைத் திட்டமிடுங்கள்!

68. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எனவே, ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்பது இல்லை. உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும்.

`விதிமுறைகள் நிறைந்த பயிற்சிகளை என்னால் செய்ய முடியாது. எனக்கு அதற்கான நேரம் கிடையாது’ என்று சொல்பவர்கள்கூட, மாடியிலோ, வீட்டு பால்கனியிலோ செடிகளை வளர்ப்பது, அதற்கான வேலைகளைச் செய்வதில் ஈடுபடலாம்.

69. பாட்டு கேட்டுக்கொண்டே சமைப்பது, வேலைசெய்வது என உற்சாகப்படுத்திக்கொள்வதும் மனவளப் பயிற்சிதான்.

70. லிஃப்ட்டில் ஏறாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். பாட்டைப் போட்டு வீட்டிலேயே ஏரோபிக் பயிற்சிகளைச்செய்யலாம்.

71. எப்போதும் சேர், சோஃபாவிலேயே உட்காராமல் தரையில் உட்கார்ந்து பழகலாம். டைனிங் டேபிளைத் தவிர்த்து, தரையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவு உட்கொள்ளும் பழக்கத்துக்கு மாறலாம்.

ஆரோக்கியமான எண்ணங்கள்

72. ஒரு நாளில், அன்றைக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை இரண்டு நிமிடங்களுக்கு நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி, மகிழ்ச்சியான நினைவை நீங்கள் ஈர்க்கும்போது, மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.

73. சமீபத்தில் நீங்கள் செய்த தவறுகள், தோல்விகள் போன்றவற்றை நினைத்து, அதில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை இனி எடுக்கும் முயற்சிகளில் சரிவரச் செய்யுங்கள்.

74. `நோ’ சொல்ல வேண்டிய இடங்களில், `நோ’ சொல்லத் தயாராகுங்கள். பிடிக்காத விஷயங்களில் உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொண்டு எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம்.

75. உங்களைத் திடமாக்குகிற, அறிவை மேம்படுத்துகிற டி.வி சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிக்கைகளை வாசிக்கலாம்.
76. பகல் கனவைக் காண தினமும் 10 நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் எப்படியாக வேண்டும் என்பதை பகல் கனவாகக் காணுங்கள்.

77. மூளைக்குப் பயிற்சியாக குறுக்கெழுத்து விளையாட்டு, சுடோகு போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.

78. நேர்மறையாகப் பேசக்கூடிய நண்பர்கள், உற்சாகப்படுத்தும் பாசிட்டிவ் நண்பர்களோடு பேசிப் பழகலாம்.

எதிர்மறை எண்ணங்களை எப்படிப் போக்குவது?

79.ஒரு நாளைக்கு எத்தனை முறை எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts), உதிக்கின்றன எனக் கவனிக்கத் தொடங்குங்கள். எதற்கு எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன எனக் கவனித்துப் பட்டியலிடுங்கள்.

அடுத்தமுறை, இதுபோல எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது, நேர்மறை எண்ணங்களைத் தோன்றச்செய்து, எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளிவையுங்கள்.

உதாரணத்துக்கு, `எனக்கு வேலை கிடைக்குமா? எனக்கு என்ன தகுதி இருக்கு... இந்த வேலையைச் செய்ய?’ போன்ற எண்ணங்கள் தோன்றினால், உடனே `எனக்கு இந்த வேலை கிடைக்கும். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வேன்’ என நினைக்கப் பழகுங்கள். நினைப்பதோடு நிறுத்திவிடாமல், அதற்கான முயற்சிகளையும் எடுங்கள்.

80. ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும்

நான் நன்மைகளைதான் செய்யப்போகிறேன்.

ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்றைய நாள் எனக்கு அதிர்ஷடத்தைத் தரக்கூடிய நாள் என்பன போன்ற நல்ல எண்ணங்களோடு, அந்த நாளைத் தொடங்குங்கள்.

81. தினமும் ஐந்து நிமிடங்களை, கற்பனைத் திறனுக்காகச் செலவிடுங்கள். அதாவது, விருப்பமான பொருள் கிடைத்துவிட்டால், எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அப்படி ஒரு பொருள் கிடைத்துவிட்டதாக கண்மூடி நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இப்படி, ஒவ்வொரு நாளும் நேர்மறை எண்ணங்களோடு வாழப் பழகிக்கொண்டால், வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைப்பன எல்லாமே ரிப்பன் கட்டப்படாத பரிசுகளாக அமையும்.

மனம் தொடர்பான பழக்கங்கள்

82.தினமும் தியானம் அல்லது யோகா போன்றவற்றை காலையோ, மாலையோ செய்யலாம். உங்களின் உணர்வுகளை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.

83. மிட்-மார்னிங், மிட்- ஈவினிங் வேளைகளில் சில நிமிடங்கள் கண்மூடி, ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுங்கள். இது உங்களின் உடல் மற்றும் மனதுக்கான ஓய்வைத் தரும்.

84. மோசமான உணர்வுகளை ஏற்படுத்தும் உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். காபி, டீ அதிகம் குடித்தால், பின்விளைவாக அதிகக் கவலை, மன அழுத்தம் ஏற்படும். உள்ளுறுப்புகள் பாதிப்பதால், சோர்ந்துபோன உணர்வு ஏற்படும்.

85. மன அழுத்தத்தை உணர்ந்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

86. இயற்கையை ரசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். காலை சூரியன், அந்தி மாலை, மழை, தென்றல், கடல், புல்வெளி, பறவைகள், மலைகள் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு நேரத்தைச் செலவழிக்கத் திட்டமிடுங்கள்.

87. மற்றவர்களுக்கு உணவைப் பரிமாறுவது சிறந்த பழக்கம். அதுபோல, பகிர்ந்து உண்ணுதலும் சிறப்பான குணம்.

88. ஃபன்னி வீடியோஸ், கலகலப்பான நிகழ்ச்சிகள், ஜோக்ஸ், குழந்தைகளின் விளையாட்டு போன்ற சிரிக்கவைக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

89. பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பழக்கங்கள்

உங்களுக்கான வேலைகள் என்னென்ன என்ற பட்டியலைப் போடுங்கள். அதை நோக்கி அன்றைய நாளைத் திட்டமிடுங்கள். அந்த நாளின் முடிவில் `எதைச் செய்தோம்... எதைத் தள்ளிவைத்தோம்... எதை முடிக்கவில்லை’ என்ற குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் உங்களின் வேலையைச் சரிவர செய்ய உதவும்.

காலையில் நாளிதழ்களைப் படிக்கும்போது, உங்களை உற்சாகப்படுத்தும் வாசகம் அல்லது தன்னம்பிக்கை தரும் வாசகத்தைப் படிக்கலாம்.

‘எது நடந்து இருந்தாலும் சரி, நடக்க இருக்கிறதும் சரி நன்மைக்காகவே’ என நினைக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களது மைண்ட்செட்டை எப்போதும் பாசிட்டிவ்வாக மாற்றிக்கொள்ளுங்கள்.

எந்த வேலையையும், தள்ளிப்போட வேண்டாம். இதை ப்ரொகாஸ்டினேஷன் (Procastination) என்று சொல்வார்கள். `நாளை செய்துகொள்ளலாம்’ எனத் தள்ளிப்போடும்போது, அன்றைய நாளின் தோல்விகள் உறுதியாகும். எனவே, தாமதிக்காமல் அன்றாட வேலைகளைச்செய்ய முயற்சி எடுப்பது நல்லது.

90. கற்றுக்கொள்ளும் திறன்கள்

நிறைய மனிதர்களிடம் பேசுங்கள். ஒவ்வொருவரிடம் ஏதாவது ஒரு நல்ல விஷயம், நாம் கற்றுக்கொள்வதற்கு இருக்கும். அதை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொருவரிடமும் நிறையும் குறையும் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, குறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மற்றவர்களை விமர்சிக்கும் உரிமை நமக்குக் கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒரே வேலையைச்செய்து போர் அடித்தால், ஒரு நாள் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தருவது, சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

சமைக்கத் தெரியாதவர்கள் சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். வண்டி ஓட்டத் தெரியாதவர்கள், ஓட்டிப் பழகலாம்.

முதலுதவி வகுப்பு எத்தனை பேருக்குத் தெரியும்? இதைத் தெரிந்துவைத்தால் உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றி இருப்பவருக்கோ ஏதேனும் ஆபத்து வந்தால், அவற்றைச் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். முதலுதவி, நீச்சல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது.

தொழில்நுட்பங்கள், நீச்சல், யோகா, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது, சமீபத்தியத் தகவல்கள், ஆன்லைனில் பில் கட்டுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளை எப்படிச்செய்வது என்பதே சிலருக்குத் தெரியாது. இதற்குத் தங்கள் பிள்ளைகளை நம்பியே இருப்பர். இதுபோன்ற தேவைகளுக்கு யாரையும் நம்பி இருக்காமல், தானே முன்வந்து கற்றுக்கொள்வதும் நல்ல பழக்கம்தான்.

வீட்டில் உள்ள ட்யூப்லைட்டில் ஃபியூஸ் போனால்கூட எலெக்ட்ரீஷியனை அழைத்து வந்து பார்க்காமல், சின்னச்சின்ன வேலைகளைத் தாங்களே எப்படிச் செய்வது எனத் தெரிந்துகொள்ளலாம்.

தூசிதட்டி சேமித்துவைத்திருந்த ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம்.

மாதம் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடுங்கள். இரண்டு புதிய திரைப்படங்களைப் பாருங்கள். படங்கள் என்பது நமக்குத் தெரிந்த மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தற்போது சப்டைட்டில்கள் அடங்கிய வேறு மொழிப் படங்களும் வருகின்றன. அவற்றில் சிறந்த படங்களைப் பார்க்கலாம். இது புதுவித அனுபவத்தைத் தரும். நல்ல நினைவுகளை உருவாக்கலாம்; படத்தில் இருக்கும் சின்ன மெசேஜ்கூட உங்களின் வாழ்க்கைக்கு உதவலாம்.

91.தொடர்பில் இருங்கள்!

எத்தனை பேருக்கு அவரவர் வீட்டு உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும், வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் தேதிகள் நினைவில் இருக்கும்? இதை எல்லாம் ஒரு டைரியில் எழுதிவைத்து அவ்வப்போது திறந்து பாருங்கள். விருப்பமானவரின் பிறந்த நாளை மறக்காமல், அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லுங்கள். உரிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு வாழ்த்து, அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும்; நல்லுறவை மேம்படுத்தும்.

பெர்சனல் ஹைஜீன் பழக்கங்கள்

92. சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் கை கழுவும் பழக்கம் நல்லது. ஒவ்வொரு முறை ரெஸ்ட் ரூம் பயன்படுத்திய பிறகும், கை கழுவும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். ரெஸ்ட்ரூம் கதவுகள், கைப்பிடிகள், டேப் போன்றவற்றை இடதுகையால் பயன்படுத்துங்கள். பொது இடங்களில் கை குலுக்கும் பழக்கம் இருப்பது சகஜம். அதை மனதில் நினைத்து நமது சுகாதாரப் பழக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளவும்.

93.காலை எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். இரவு முழுதும் வாயில் சேர்க்கப்பட்ட கிருமிகள், காபியின் வழியே வயிற்றுக்குள் சென்றால், தொண்டை, உணவுக்குழாயில் தொற்றுக்கள் ஏற்படும். பற்களை, வாயை சுத்தப்படுத்திய பிறகுதான், நீரையோ அல்லது மற்ற உணவுகளையோ சாப்பிட வேண்டும். கடைகளில் காபி, டீ கப்களை வலது பக்கம் பிடிக்காமல், இடது பக்கம் பயன்படுத்தி அருந்துவது ஒரளவு பாதுகாப்பைத் தரும். ஏனெனில், பலரும் வலது பக்கத்தில் வைத்துதான் காபி, டீ யைச் சுவைத்திருப்பார்கள்.

ஒருவரது செல்போன், இயர் ஃபோன் போன்றவற்றைப் பயன்படுத்தத் தந்தால்கூட, ஒருமுறை துடைத்து விட்டுக் கொடுப்பதுதான் சரி. அதுபோல் ஒவ்வொரு பொருட்களையும் மற்றவரிடம் கொடுப்பதற்கு முன் ஒரு முறை சுகாதாரத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

94. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் தேய்க்கும் பிரஷை மாற்றவும். அதுபோல் அன்றாடம் பயன்படுத்தும் சீப்பை வாரம் ஒருமுறை கழுவலாம். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. அதுபோல், கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தனியாக வைத்துக்கொள்வது அவசியம். ஹோட்டலில் வைக்கப்படும் ஹேண்ட் டவல்கள் எந்த அளவுக்குச் சுகாதாரமாக இருக்கின்றன என்று தெரியாது. ஆகையால், டிஷ்யூவைப் பயன்படுத்துவதே சிறந்தது.

95. ஹோட்டலில் சாப்பிட்ட பின் வைக்கும் இனிப்பு மிட்டாய்களைத் தவிர்த்துவிடுங்கள். அதில், பெரும்பாலானோர் கைவைத்து எடுத்திருக்கலாம். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின், லிஃப்ட் பட்டன்கள், ஏ.டி.எம் மெஷின் பட்டன்கள், ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றைத் தொட்ட பிறகு கை கழுவிக்கொள்வது நல்லது. எல்லா இடங்களிலும் தண்ணீரைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, கைகளிலேயே ஹேண்ட் சானிடைசர் வைத்திருக்கலாம்.
96. வீட்டைச் சுத்தம் செய்யும்போது அதிகம் கவனிக்காத இடங்களான சோஃபா மூலைகள், சுவிட்ச் போர்டு, ரிமோட், கைப்பிடிகள், கம்ப்யூட்டர் கீ போர்டு, வாட்டர் கேன் மூடி, திரைச்சீலைகள் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

97. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழக் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்

தினமும் அரை மணி நேர் நடைப்பழக்கம்.

காலை எழுந்ததும் பல் துலக்கிய பிறகு நீர் ஆகாரத்தைக் குடிப்பது.

தினமும் ஒரு புதிய நண்பரை உருவாக்குவது.

தியானம் அல்லது யோகாவுக்கு நேரம் ஒதுக்குவது.

பெரும்பாலும் உங்களது உணவு காய்கறி, பழங்கள், பயறு, பருப்பு வகைகளால் தயாராகி இருப்பது.

98. புற்றுநோய் தவிர்க்க ஐந்து வழிகள்

வேகவைத்த காய்கறிகளை ஒருவேளை உணவாகச் சாப்பிடுவது. பழங்களையும், நட்ஸ்களையும் நொறுக்குத்தீனியாகச் சுவைப்பது.

மூலிகை டீ, கீரை சூப், மூலிகை ரசங்களை அவ்வப்போது சாப்பிடுதல்.

குடி, புகைப் பழக்கங்கள் இல்லாமல் இருத்தல.

முன் தூங்கி முன் எழும் பழக்கம். எட்டு மணி நேரம் சீரான தூக்கத்தைக் கடைப்பிடித்தல்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்ப்பது.

99. தீய பழக்கங்களைக் கைவிட ஐந்து வழிகள்

தீய பழக்கங்களை விட வேண்டும் என டைரியில் எழுதிவையுங்கள். மனதில் பத்து முறை அடிக்கடி சொல்லிப்பாருங்கள்.

எந்தச் சூழல் உங்களைத் தீய பழக்கங்களுக்கு இழுத்துச் செல்கிறதோ, அந்தச் சூழலைத் தவிர்த்திடுங்கள்.

எந்தச் சூழலிலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல், ஒவ்வொரு தீய பழக்கத்தை விடும்போதும், உங்களுக்கு நீங்களே பரிசுப் பொருட்களை வாங்கி, உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.

தனிமையாக இருப்பதைத் தவிர்த்தாலே, தீய பழக்கங்களை வெகு சீக்கிரத்தில் விட முடியும்.

விருப்பமானவர்கள், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவுசெய்யுங்கள்.

100. மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்

மனதுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள்.

கிடைக்கும் நேரத்தை இயற்கையுடன் செலவழியுங்கள்.

உங்களுக்கு நடந்த நல்ல அனுபவங்களைத் தினந்தோறும் எழுதுங்கள்.

வாய்விட்டு சிரிப்பதால் எண்டோர்பின் சுரக்கும்; இது மகிழ்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

பாசிட்டிவ்வாகப் பேசும் நண்பர்கள், உறவினர்களோடு அதிகமான நேரத்தைச் செலவழியுங்கள்

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!


''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.
யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம்.
"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" என்கிறார் சாய் கிஷோர்.
வைட்டமின் அதிகரிப்பதால் வரும் பிரச்னைகள்

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் தேவை. இதற்கும் அதிகமாக இந்த வைட்டமின் நம் உடலில் சேரும்போது 'ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்னைகளில் தொடங்கி அதிகப்படியான வைட்டமின்கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

வைட்டமின் டி
எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்் தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், 'ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.

வைட்டமின் இ
இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின்
இ மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது, ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.

வைட்டமின் கே
ரத்தம் உறைதலுக்கு இந்த வைட்டமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது 'ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் (ANTI COAGULANTS) மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

சென்னை 'க்வா நியூட்ரிஷன்' அமைப்பைச் சேர்ந்த உணவியல்
நிபுணர் கிருத்திகா ராஜன் தரும் வைட்டமின் டிப்ஸ்:

வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்கலாம்.

பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.

வைட்டமின் இ மிகச் சிறந்த 'ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில வழிகள்!

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில வழிகள்!

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அதில் முகப்பரு தான் முதன்மையானது. அதோடு அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும்.
எனவே எண்ணெய் பசை சருமத்தினால் முகப்பொலிவை இழந்து இருப்போரின் முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் நீங்கள் அழகாகவும், வெள்ளையாகவும் ஜொலிக்கலாம்.
4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
2 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் பால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாட்களுக்கு 1 முறை செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
குளிர்ந்த க்ரீன் டீ நீர்மத்தில் சிறிது தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகத்தின் பொலிவு மேம்படும்.
ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை சிறிது எடுத்து அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள கருமை அகலும்.
2 டேபிள் ஸ்பூன் தயிரில், 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

💢💢 தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும்
தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
 அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.

டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!

டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!

உடலை சுத்தப்படுத்தும் முறைகள் பற்றிய விரிவான குறிப்புகள் !

உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான், நமது ஆரோக்கியத்தின் அடையாளம். சுத்தமாக இருப்பது என்றால், குளித்துச் சுத்தமாக இருப்பது மட்டும் அல்ல... உடலுக்கு உள்ளேயும் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாகவைத்திருப்பதும்தான். அந்தக் காலத்தில், உடலுக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பல வழிமுறைகளைக் கையாண்டார்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்திக்கு மருந்து எடுத்துக்கொள்வது;

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அல்லது எனிமா எடுத்துக்கொள்வது;

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்துவது;

மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்களில் அஞ்சனமிடுவது;

மாதத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்து, நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால், உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டன. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைத்தது. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கூடின. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. உள் உடலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோன்பு போன்ற வழிமுறைகளில் சுத்தம் செய்வதைப்போல, வெளி உடலைச் சுத்தம் செய்ய மூலிகைக் குளியல் முதல் மண் குளியல் வரை பல விஷயங்களைக் கற்றுத்தந்தன, நம் பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள்.

அதனால்தான் அந்தக் காலத்தில், சனிக்கிழமையானால் விளக்கெண்ணெயைக் கையில்வைத்துக்கொண்டு தாத்தா - பாட்டிகள், குழந்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. உடல் நச்சுக்களைக் குறைக்க, டேப்லெட் தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ‘நச்சுகளை எப்படி நீக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன’ என விளக்குகின்றனர் ஆயுர்வேத மருத்துவர் தீனதயாளன், சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் மற்றும் இயற்கை மருத்துவர் சோஃபியா தேன்மொழி.

டீடாக்ஸ் என்பது...

நம்முடைய உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால், இவற்றால் எல்லா நச்சுக்களையும் வெளியேற்ற முடிவது இல்லை. நம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையால் உடலில் சேரும் நச்சுக்களை, கழிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றுவதை ‘நச்சு நீக்கு சிகிச்சை’ அல்லது ‘டீடாக்ஸிஃபிகேஷன்’ (Detoxification) சுருக்கமாக, ‘டீடாக்ஸ்’ என்கிறோம்.

கிளென்சிங்

சருமத்தைச் சுத்தம் செய்வதை ‘கிளென்சிங்’ என்கிறோம். இதனால், தோலில் உள்ள அழுக்குகள், கிருமிகள், இறந்த செல்களை அகற்றலாம். ஆனால், கிளென்சிங்கால் நச்சுக்களை நீக்க முடியாது. நச்சு நீங்க வேண்டும் என்றால் டீடாக்ஸ் செய்ய வேண்டும்.

டீடாக்ஸ் ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். இதனால், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் தன்னுடைய இயக்கத்தைக் குறைத்துக்கொள்ளும். இது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்; முதுமையை விரைவுபடுத்தும். இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும்.

யார் டீடாக்ஸ் செய்யலாம்?

எல்லா வகையான நச்சு நீக்க முறைகளையும் பெரியவர்கள் மேற்கொள்ளலாம். இருப்பினும், சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. ஆலோசனை பெறும்போதுதான், அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப எந்த மாதிரியான நச்சு நீக்க சிகிச்சை பெறுவது என முடிவு செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு வயிற்றைச் சுத்தப்படுத்த, பேதி மருந்து மட்டும் கொடுக்கலாம். இதையும், மருத்துவரின் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டியது அவசியம்.

நச்சுக்கள் சேரும் காரணங்கள்

உணவு, நீர், காற்று என எந்த ஒரு விஷயமும் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும்.
சுவையூட்டிகள் சேர்ப்பது.
அதிக மசாலா, வனஸ்பதியை உணவில் சேர்ப்பது.
உணவுப் பொருட்களை சரியாகக் கழுவாமல் பயன்படுத்துவது.
சுகாதாரம் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது.
மாசடைந்த நீரைப் பருகுவது.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது.
ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது.
பாமாயிலை உணவில் சேர்ப்பது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரத்தால் விளைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது.

டீடாக்ஸ் வகைகள்

ஆயுர்வேத சிகிச்சைகள்
‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்... ஏன் டீடாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்?’ எனக் கேட்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும் உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும் துணைப் பொருட்களாக நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும். நச்சுக்களை நீக்க ஆயுர்வேத மருத்துவம் ‘பஞ்சகர்மா’ சிகிச்சையை அளிக்கிறது. உடலைச் சுத்தப்படுத்த, அதாவது, கிளென்சிங் செய்ய ‘ஷோதனம்’ சிகிச்சையை அளிக்கிறது.

பஞ்சகர்மா
1. நசியம் (Nasiyam)
2. வமனம் (Vamanam)
3. விரேசனம் (Virechanam)
4. கஷாயவஸ்தி (Kashayavasti)
5. ஸ்நேஹாவஸ்தி (Snehavasti)

இந்த ஐந்து வகையான சிகிச்சைகளும்தான் ‘பஞ்சகர்மா’. உடலில் எந்த அளவுக்கு நச்சு இருக்கிறதோ, அதைப் பொறுத்து, எந்த மாதிரியான நச்சு அகற்றும் சிகிச்சை தேவை என மருத்துவர் முடிவு செய்வார். ‘எனக்கு நசிய சிகிச்சை மட்டும் போதும்’ என்றோ, ‘வமன சிகிச்சை கொடுங்கள்’ என்றோ நோயாளி முடிவு செய்ய முடியாது. நோய் மற்றும் நோயாளிகளின் தன்மை, நோயின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொரு சிகிச்சையின் கால அளவும் மருந்துகளின் அளவும் மாறுபடும்.

நசியம்

மூக்கில் செய்யும் சிகிச்சை ‘நசியம்’. மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தை மூக்கில்விடுவார்கள். பிரச்னையைப் பொறுத்து, இரண்டு முதல் ஏழு சொட்டுகள் வரை விடப்படும். மூக்கில் விடும் மருந்து, தலையில் உள்ள உறுப்புக்களுக்குச் சென்று, நச்சு நீக்கும் பணியைச் செய்யும்.

பலன்கள்: சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நாள்பட்ட நோய்கள், குரல் தொடர்பான பிரச்னை, தீவிரமான தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீவிரமான சைனஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் சிகிச்சை இது.
சுத்தமாகும் பகுதி: மூக்கு முதல் சுவாசப் பாதை வரை சுத்தமாகும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

வமனம்

‘வமனம்’ என்றால், வாந்தி எடுத்தல் என்று பொருள். இதற்காக, மூலிகைகள், பசும்நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தைக் குடிக்கக் கொடுப்பர். மேலும், சில மருந்துகளும் கொடுக்கப்படும். இவை வயிற்றுக்குள் சென்றதும், வாந்தியை ஏற்படுத்தும். வாந்தி வழியாக நச்சுக்கள் வெளியேறும்.
பலன்கள்: சர்க்கரை நோய், உடல்பருமன், தைராய்டு, கல்லீரல், வளர்சிதைப் பிரச்னை, குடிநோயால் பாதிக்கப்பட்டோர் பிரச்னைகள், சரும நோய்கள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: வாய் முதல் வயிறு வரை உள்ள பகுதிகள் சுத்தமாகும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம்.

விரேசனம்

வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதல் என்று பொருள். இதற்கு, மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கப்படும். மருந்து வயிற்றுக்குள் சென்று வேலை செய்ய ஆரம்பித்ததும், பேதி ஆகும். வயிற்றில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.

பலன்கள்: சரும நோய்கள், சிறுகுடல் தொடர்பான பிரச்னை, பெருங்குடல் இயக்கம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றைத் தீர்க்கும்.

சுத்தமாகும் பகுதி: உணவுக்குழாயை மட்டும் அல்லாமல், செரிமான மண்டலத்தில் உள்ள கல்லீரல், மண்ணீரல் என எல்லா உறுப்புகளிலும் செயல்படும். இந்தச் சிகிச்சையை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

கஷாய வஸ்தி

ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதை ‘வஸ்தி’ அல்லது ‘கஷாயவஸ்தி’ என்பார்கள். இதில், எனிமா கொடுத்துக் கழிவுகள் வெளியேற்றப்படும்.

பலன்கள்: தீவிரமான அடி முதுகுவலி, முதுகுத்தண்டு பிரச்னை, மூட்டுப் பிரச்னை, வலி, ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

ஸ்நேஹவஸ்தி

மருத்துவ மூலிகைகள் கலந்த எண்ணெயைக் கொடுப்பர். எண்ணெய் கொடுப்பதால், கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: முதுகுவலி, மலச்சிக்கல், தளர்வடைந்த தசைகள், மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

சித்த மருத்துவ நச்சு நீக்க சிகிச்சைகள்

வேது

நீராவி பிடிப்பதைத்தான் ‘வேது’ என்கின்றனர். இதனை, பல ஸ்பா சென்டர்கள், ஸ்டீம் பாத் ஆக அளிக்கின்றன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், சூடான செங்கல், வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, எலுமிச்சைச் சாறு ஆகிய மூலிகைகளை வெந்நீரில் கொட்டி, நீராவி பிடிப்பதால், வியர்வை மூலமாகக் கழிவுகள் வெளியேறும். மாதம் இரு முறை நீராவி பிடிக்கலாம்.

சுட்டிகை

வெயிலில் நிற்பதன் மூலம், உடலின் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையைப் பெருகச் செய்யும் சிகிச்சை. வியர்வை வழியாக நச்சுக்கள் வெளியேறும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை ஏழு மணிக்கு முன், வெயிலில் 15 நிமிடங்கள் நிற்கவைக்கலாம். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மாலை வெயிலில் 20 நிமிடங்கள் நிற்கலாம்.

தலைக் கழிவு

பற்றுப் போடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றும் முறை இது. சைனஸ், நீர்கோத்தல் பிரச்னை இருப்போர், நொச்சி, தும்பைப்பூ, தைவேலை ஆகிய மூலிகைகளை அரைத்து, நெற்றியில் பற்றுப் போடலாம். 20 நிமிடங்கள் வரை இதை அகற்றக் கூடாது. இதன் மூலம், தலையில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். அனைவரும், மாதம் இரு முறை போட்டுக்கொள்ளலாம். மழைக்காலத்தில் ஒருமுறை போதும்.

வாந்தி அமர்த்தல்

சித்த மருத்துவர், நோயாளிக்கு மறுக்காரை, கடுகு, உப்பு நீர் கலந்து குடிக்கக் கொடுப்பார். குடித்த உடன் வாந்தி ஏற்படும். இதன்மூலம், இரைப்பையில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

நசியம்

சொட்டு மருந்தை மூக்கில் விட்டுச் செய்யும் சிகிச்சை. உப்பு நீர், சுக்குத் தைலம், நாசிரோகநாசத் தைலம், தும்மைப்பூச் சாறு, தைவேலைச் சாறு ஆகியவை கலந்த மருந்தை, நோயாளியின் மூக்கில் விடுவார். இதை, மாதம் ஒரு முறை செய்யலாம். மூக்கில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். தீராத தலைவலிகள் குணமாகும்.

நாசிகா பரணி

மூக்கில் மூலிகைப் பொடிகளைப் போட்டு, தும்மலை ஏற்படுத்துவது. மூக்கில் சுண்டைக்காய் வேர், சந்தனத் தூள், அக்ராஹாரம் போன்ற மூலிகைகளைத் தூளாக அரைத்துப் போட்டு, தும்மல் உருவாகச் செய்து கழிவுகளை வெளியேற்றுவர். இதையும், மாதம் ஒரு முறை என, பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டும் சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.

கழிச்சல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதலைத்தான் ‘கழிச்சல்’ என்பர். மருத்துவர் ஆலோசனையோடு முருக்கன் விதை மாத்திரை அல்லது எப்சம் உப்பு மற்றும் கீழாநெல்லி சாறு ஆகியவை கொடுக்கப்படும்.

பொதுவான டீடாக்ஸ் முறைகள்
பழங்கள்-

இளநீர் டயட்

இரு வாரங்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் முழுவதும் வெறும் பழங்களை மட்டுமே முன்று வேளையும் எடுத்துக் கொள்ளலாம். 20 வயதுக்கு மேற்பட்டோர், மாதம் ஒரு முறை, இரு வேளைக்கும் சேர்த்து, ஐந்து இளநீர் வரை குடிக்கலாம். இரவில் மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம். இரவு, உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கலாம்.

அசோகப்பட்டை நீர்

அசோகப்பட்டையைச் சூரணம் அல்லது கஷாயத்தில் சிறிதளவு கலந்து குடிக்க, கர்ப்பப்பை சுத்தமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.

சீரகக் குடிநீர்

நீரைக் கொதிக்கவைத்து, நன்கு கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு இறக்கி, அன்றைய தினம் முழுவதும் குடித்துவரலாம். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்குச் சீரகத் தண்ணீர் குடிக்கலாம். பசியைத் தூண்டும், செரிமானத்தைச் சீராக்கும்.

பெருநெல்லிச் சாறு

நெல்லிக்காயை விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில், சிறிதளவு தண்ணீர்விட்டு, நன்கு அரைத்து, சாறு பிழிய வேண்டும். இதைத் தினமும் அருந்தலாம். நெல்லியில் ஆன்டிபயாட்டிக் இருப்பதால், கிருமிகள் மற்றும் கழிவுகளை அகற்றும். எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு நல்லது. வளர்சிதை பிரச்னை, அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு, நெல்லிச் சாறு அருந்தலாம். கல்லீரலைச் சுத்தப்படுத்துவதில் நெல்லிக்கு முக்கியப் பங்கு உண்டு.

தினமும் எடுத்துக் கொள்ளக் கூடியவை...

நரம்பு டானிக்... பிரம்மி!

பிரம்மி இலைகள் மற்றும் வேர் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தலாம். சின்னச்சின்ன இலைகளாக இருக்கும் இதன் வேரும் நல்லது. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் அனைவரும் அருந்தலாம்.

மரமஞ்சள்

மருந்தாக அல்ல, தினசரி உணவிலேயே சிறிது மரமஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம். இது, அல்சர், வயிற்று எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாகும். வயிற்றைச் சுத்தம் செய்யும். கிருமிகளை அழிக்கும். நச்சுக்களை அகற்றும்.

இளநீருடன் ஏலக்காய்

இளநீரில் ஏலக்காய் ஒன்றைத் தட்டிப்போட்டுக் குடிக்க, சிறுநீர் தொற்றைச் சரிசெய்யும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் தொற்றைக் குணமாக்கும். கிருமிகளை அழிக்கும்.

சீந்தில்கொடி கஷாயம்

சீந்தில் இலைப்பொடியைக் கஷாயமாக வைத்துக் குடித்தால், எலும்பு, மூட்டுகள் தொடர்பான பிரச்னையைச் சரிசெய்யும்.

கடுக்காய்ப் பொடி

கடுக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து, இரவில் ஒரு கிளாஸ் குடிக்க, மறுநாள் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

எலுமிச்சைச் சாறு

தேன் கலந்த எலுமிச்சைச் சாறு, உடல்பருமனைக் குறைத்து கெட்ட கொழுப்பைக் கரைக்கும். அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

இளநீர்

உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை இளநீர் குடிக்கலாம். அவர்கள் இழக்கும் நீர்ச்சத்தை இளநீரால் மீட்டு எடுக்க முடியும். வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.

ஏபிசி ஜூஸ்

ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4, கேரட் - 1 ஆகியவற்றுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அப்படியே பருகலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

கிரீன் டீ

ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், கிரீன் டீ உடலின் நச்சுக்களை அகற்றும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆவாரம் பூ ஜூஸ்

ஆவாரம் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றைத் தேன் கலந்து ஜூஸாக்கிக் குடிக்க, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் பொலிவாகும். சருமம் பளிச்சென இருக்கும்.

திரிபலா டீ

கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்ந்த கலவைதான் திரிபலா. ஒரு கப் வெந்நீரில் கால் டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு, தேன் கலந்து, வாரம் இருமுறை குடிக்கலாம். கெட்ட கொழுப்பு, கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை அகற்றும்.

அருகம்புல் ஜூஸ்

ஒரு கைப்பிடி அருகம்புல், சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து, ஜூஸாக அடித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிக்க, உடலில் உள்ள தேவையற்ற தாதுஉப்புகள் வெளியேறும்.

தாளித்த மோர்

மோரில் புரோபயாடிக் சத்துக்கள் உள்ளன. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் மோர் அருந்துவது நல்லது. வாயு தொடர்பான பிரச்னை, அல்சர், ஆசிட் உருவாவது போன்ற பிரச்னைகளைத் தடுக்கும். மோருடன் சிறிது சீரகம், பெருங்காயம், சின்ன வெங்காயம் கலந்து குடிக்க வேண்டும்.
அஷ்ட சூரணம்

சுக்கு, திப்பிலி, மிளகு, வால் மிளகு கலந்த அஷ்ட சூரணத்தை, மோரில் கலந்து குடிக்கலாம். வாயுத் தொல்லை இருப்பவர்கள் அவசியம் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.

டீடாக்ஸ் டீ

செம்பருத்திப் பூ, தாமரை இதழ் ஆகியவற்றை, சந்தனக்கட்டை ஊறிய நீரில் போட்டுச் சூடாக்கி, தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு சந்தனக் கட்டையை வாங்கி, ஒவ்வொரு முறையும் ஊறவைத்து, மீண்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும்.

இயற்கை மருத்துவத்தில் டீடாக்ஸ்!
கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவசியம் சாப்பிடவும்.
ஒரு நாளைக்கு மூன்று நிறக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.

காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுந்திருப்பது நல்லது.
காலை மூன்று முதல் ஐந்து மணி நுரையீரலின் நேரம், என்பதால் சாப்பாடு இல்லாத உடலாக இருப்பதால், சுத்தமான காற்றை கிரகித்துக்கொள்ள உதவியாக இருக்கும். சீரான எண்ணங்கள் தோன்றும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். அந்த நாளே உற்சாகமாக மாறும். மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
காலை ஐந்து முதல் ஏழு மணி பெருங்குடலின் நேரம், ஒவ்வொரு மனிதனும் ஏழு மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். முதல் நாள் சேர்த்துவைத்த கழிவுகள் வெளியேறிவிட்டால், உடல் சுத்தமாகிவிடும்.

காலை ஏழு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை எடுத்தாக வேண்டும். உணவின் நேரம் தவறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதுபோல மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும்.
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது நல்லது.
ஆழ்ந்த தூக்கம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை இருப்பதாக அமைத்துக்கொள்வது, பல நோய்களை வராமல் தடுக்கும். இந்த நேரம் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் நேரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தூங்குவது முக்கியம்.

உடலில் கழிவுகள் சேராமல் தடுக்க...
சிறுதானியம், கோதுமை, தவிடு நீக்கப்படாத அரிசி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பயறு, காய்கறி, கனி வகைகள், தானியங்கள் ஆகியவற்றைச் சுழற்சிமுறையில் சாப்பிடலாம்.
ரவை, மைதா, வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரவை, சேமியா ஆகியவற்றில் எண்ணெய் சேர்த்து, உணவைத் தயாரிக்கக் கூடாது.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
உணவைச் செக்கில் ஆட்டிய எண்ணெயால் சமைப்பது உடலுக்கு நல்லது.

எண்ணெய் குளியல்

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், ஷீராபலா தைலம், ஏலாதித் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். கண்களுக்குக் குளிச்சியைத் தரும். நல்ல தூக்கம் வரும். அன்று நாள் முழுவதும் லேசான உணவுகளைச் சாப்பிடலாம். இதுவே, உடலில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு தட்டிப்போட்டு, லேசாகச் சூடு செய்து, முதலில் உடல், பின் தலைமுடி எனப் பூசிய, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
சாதாரண ஹெட் பாத் இருமுறை எடுக்கலாம்.

பலாஅஸ்வனகந்தித் தைலம் (மருத்துவ மூலிகைகள் கொண்ட நல்லெண்ணெய் இது) போன்ற எண்ணெயை, உடல் முழுதும் 20 நிமிடங்கள் பூசிய பின் குளிக்கலாம்.
டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்

கபாலபாதி

சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.

வஸ்திரிகா

சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.

குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

டீடாக்ஸ் ஆசனங்கள்...

போட் ரைடிங்

காலை நீட்டி உட்கார வேண்டும். பின்புறம் சாய்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைத் துடுப்பு போல கடிகாரத் திசையில் (கிளாக் வைஸ்) சுழற்ற வேண்டும். (சுழற்றும்போது, கையின் கட்டைவிரல்களை உட்புறம் வைத்து மடித்துக்கொள்ளவும்) பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே எதிர் கடிகாரத் திசையில் (ஆன்டி க்ளாக்வைஸ்) சுழற்ற வேண்டும். இரண்டையும் தலா 10 முறை செய்ய வேண்டும்.

குறிப்பு: முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், காய்ச்சல் வந்தோர், மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் செய்யக் கூடாது.

பலன்கள்: உடல் எடை குறையும். கல்லீரல் சுத்தமாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் செய்யலாம். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, சிறந்த பயிற்சி இது. கெட்ட கொழுப்பு நீங்கும்.

டைனமிக் ஸ்பைனல் ட்விஸ்ட்

காலை நீட்டி ‘V’ போல பரப்பிக்கொள்ளவும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளும்போது மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். வலது பக்கம் உடலை வளைத்து, வலது காலைத் தொடும்போது, மூச்சை விடவும். மீண்டும் மூச்சை இழுத்தபடி நேர் நிலைக்கு வந்து, இடது பக்கம் வளைந்து, இடது காலைத் தொடும் போது மூச்சை விடவும். இது, ஆங்கில எழுத்து ‘X’ போன்ற வடிவமாகத் தெரியும். இந்தப் பயிற்சியை இருபுறமும் ஐந்து முறை செய்யலாம்.

குறிப்பு: கர்ப்பக் காலம், காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.
பலன்கள்: முதுகு வலி சரியாகும். தொடை, வயிற்றுப் பகுதி உறுதியாகும். வயிறு ட்விஸ்ட் ஆவதால், கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் இயக்கம் பெற்று, அந்தப் பகுதிகளில் உள்ள கழிவுகள் வெளியேறும். அடிவயிறு சுத்தமாகும்.

ஃபார்வேர்ட் பெண்டிங்

காலை மடக்கி அதன் மேல் உட்காரவும். பாதங்களை ‘V’ போல விரித்து உட்கார்ந்தால், வலி தெரியாது. காலின் வலது கட்டைவிரல் இடது கட்டைவிரலின் மேல் பதிய வேண்டும். இதுதான் வஜ்ராசனம் போஸ். கையின் கட்டைவிரலை உள்வைத்து மூடி, தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் மேல் வைத்து, முன்பக்கம் குனிய வேண்டும். எழுந்திருக்கும்போது மூச்சை இழுக்கவும். வஜ்ராசன நிலைக்கு வந்த பின், மூச்சை விட்டுவிடவும்.

குறிப்பு: அடிஇறக்கம், பைல்ஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்போர் தவிர்க்கவும். காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் செய்யக் கூடாது.

பலன்கள்: அடிவயிறு அழுத்தப்படுவதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாதவிலக்குப் பிரச்னை சீராகும். தொப்பை கரையும். கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் பருமன் குறையும்.

ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய டீடாக்ஸ் டிரிங்க் டயட்

முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.

மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.

நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.

ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.

பலன்கள்: கல்லீரல் சுத்தமாகும். சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்கிவிடும். கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. மாதத்தில் ஒரு முறை இந்த டீடாக்ஸ் டிரிங்க் டயட்டைப் பின்பற்றலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் கிடைக்கும்.

உச்சி முதல் பாதம் வரை கிளென்சிங்

கூந்தல்: கரிசலாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை சாப்பிடுவது, குப்பைமேனியைக் கூந்தலில் பூசுவது, சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது போன்றவை கூந்தலைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக்கும்.

ஸ்கால்ப் (மண்டைத் தோல்): மண்டைத் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பூசலாம். மருத்துவ எண்ணெய்களை மருத்துவர் உதவியோடு பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயக் குடிநீரை வாரம் மூன்று முறை குடிக்கலாம்.

மூளை: வால்நட், மீன், முட்டை, தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

கண்கள்: பொன்னாங்கண்ணி, பாதாம், கேரட் ஜூஸ், கேரட் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம்.

சருமம்: பப்பாளி, மா, கேரட், சிட்ரஸ் பழங்கள், மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

உதடு: வெள்ளரி, பீட்ரூட் சாறு, புதினா ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

உணவுக்குழாய்: காரம், எண்ணெய் குறைந்த உணவுகள், நெய், கேரட் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

இதயம்: தாமரைத்தண்டு, செம்பருத்தி, பிளாக்ஸ் விதைகள், நல்லெண்ணெய், பாதாம் ஆகியவை நல்லது.

நுரையீரல்: அகத்திக்கீரை, முள்ளங்கி, திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்

வயிறு: வெண்பூசணி, நீர் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள், முட்டைகோஸ் போன்றவை நல்லது.

கல்லீரல்: கொத்தமல்லி, நெல்லி, கீழாநெல்லி, சிட்ரஸ் பழங்கள், மோர், கரிசாலை, பச்சை நிறக் காய்கனிகள் ஆகியவை கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல்: தண்ணீர், காளான், கேரட் ஆகியவை நல்லது.

கணையம்: ஊறவைத்த வெந்தயம், கொய்யா, மாதுளை சாத்துக்குடி ஆகியவை நல்லது.

சிறுநீரகம்: தாமரைத்தண்டு, பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சின்ன வெங்காயம், வாழைத்தண்டுச் சாறு, நீர்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுகுடல், பெருங்குடல்: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், கீரைகள், இஞ்சி, மோர், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் காய்கனிகள் நல்லது.

கர்ப்பப்பை: கற்றாழை, செம்பருத்திப் பூ, பாதாம், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

எலும்பு: பால், கேழ்வரகு, சிறுதானியம், கொய்யா, நட்ஸ், எள் சாப்பிடலாம்.

நரம்பு: கசப்புச் சுவைகொண்ட உணவுகள், வாழைப்பழம், மூலிகை ஆகியவை நல்லது.

ரத்தம்: சிவப்பு நிற உணவுகள், பேரீச்சை, காய்ந்த திராட்சை, கேரட் ஜூஸ், சுண்டல் சாப்பிடலாம்.

டீடாக்ஸ் என்பதை மருத்துவ சிகிச்சையாகக் கருதாமல், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, நமது பழக்கவழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டாலே, நம் உடலும் மனமும் புத்துணர்வாகி, ஆரோக்கியத்துடன் இருக்கும். டீடாக்ஸ் செய்வோம் நம்முள் மலர்ந்து, புத்துணர்வு பெறுவோம்.