நீங்காத படையை நீக்கும் நெட்டிலிங்கம்!

நீங்காத படையை நீக்கும் நெட்டிலிங்கம்!
வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல
இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள். பொதுவிடங்களில் இது போல் சொறிவதால் பிறரின் கேலிக்கும், ஏளனத்துக்கும் ஆளாக வேண்டிவரும். சிலர் வெளியிடங்களில் அரிப்பு ஏற்பட்டால் சொறியாமல், கஷ்டப்பட்டு அரிப்பை அடக்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்தவுடன் நன்கு சொறிந்து தள்ளிவிடுவார்கள். இதனால் அரிப்புள்ள இடங்களெல்லாம் இரத்தக் களறியாக மாறிவிடும். பின் எரிச்சல் அதிகரித்து, வலி தாங்காமல் ஏதாவது எண்ணெயை தடவி அரிப்பை தணித்துக்கொள்வார்கள். வெயில்காலத்தில் மட்டும் இந்த அரிப்பு அதிகமாவது ஏன் தெரியுமா? நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே அரிப்புக்கு காரணமாகும்.
பூஞ்சைக் கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த வி­யம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும் மனிதத் தோல் என்றால் பூஞ்சைக் கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். பூஞ்சைக்கிருமிகள் தோலைப் பற்றிக்கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி வெகு விரைவாக இனவிருத்தி செய்து வளர ஆரம்பித்து விடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த நாம் சொறிவதால் தோலில் சிறிய இரத்தக் காயங்கள் உண்டாகி, இரத்தத்தில் பூஞ்சை கிருமிகள் இன்னும் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். பூஞ்சை கிருமிகளை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமமானதுதான். ஏனெனில் ஒருவரிடம் இருந்து அந்த கிருமிகள் அழிவதற்கு முன் குறைந்தது 10 பேர்களுக்காவது தங்கள் இனவிருத்திகளை பரிமாற்றம் செய்து கொண்டுதான் மறைகின்றன. ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித்தொற்று வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. விடுதியில் படிப்பவர்கள், பழைய, சுத்தமில்லாத ஈரத்துணியை அணிபவர்கள், நீண்டநேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிபவர்கள், ஒரே உடையை மாற்றிப் போடுபவர்கள், பிறரின் அழுக்குத் துணிகளையும் சேர்த்து ஒன்றாக துவைத்து பயன்படுத்துபவர்கள் என பலதரப்பட்டோர்களுக்கு பூஞ்சை கிருமிகளின் தொற்று உண்டாகிறது. வெயில் காலத்தில் இது அதிகப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், அதிக அசைவ உணவு உண்பவர்கள் பூஞ்சைகிருமியின் பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள்.
பூஞ்சைகிருமியின் தொற்றை தவிர்க்க விரும்புபவர்கள் உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். கழுத்து, பிடறி, அக்குள், தொடையிடுக்கு பகுதிகளில் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதுடன், உலர்ந்த துண்டால் ஈரம் தங்காமல் துடைக்க வேண்டும். வெயில் காலத்தில் காலை மற்றும் மாலையில் தனித்தனி ஆடைகளை அணியவேண்டும். படையுள்ளவர்களின் உடைகளை தவிர்க்க வேண்டும். பூஞ்சை கிருமியால் தோன்றும் தொற்றானது படை, படையாக படருவதால் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நமக்கு நன்கு அறிமுகமான நெட்டிலிங்க மரத்தின் இலை மற்றும் பட்டை பூஞ்சைக் கிருமிகளை அழித்து, படையினால் தோன்றும் புண்களை ஆற்றும் என்றால் ஆச்சர்யம் தானே.
பாலியால்தியா லாங்கிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அன்னோனேசியே குடும்பத்தைச் சார்ந்த நெட்டிலிங்க மரங்கள் வீடுகளிலும், பூங்காக்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. நெட்டிலிங்க இலையில் ஆல்பா மற்றும் பீட்டா அமிரின், லுபியால், பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால், டெர்பின்கள் ஆகியன உள்ளன. மேலும் இதன் பட்டையிலுள்ள ஆக்சோஸ்டிப்பானின் மற்றும் லானுகினோசின், அசாபுளுரோன் ஆகியன பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெட்டிலிங்க இலைகளை மைய அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவி வர படை நீங்கும். இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிட வயிற்றுக்கிருமிகள் வெளியேறும். ஆனால் குறைந்தளவே சாப்பிட வேண்டும். பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அதனைக் கொண்டு படையுள்ள இடங்களில் தடவி வர படை நிறம் மாறும்