அடிப்பது தீர்வல்ல - குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

அடிப்பது தீர்வல்ல... அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?



அன்பாக சிரித்து மகிழும் குழந்தைகள்

''குறும்புகளும், தவறுகளும் செய்றது குழந்தைகளின் இயல்பு. அதுக்காக பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதும், கடுமையான வார்த்தைகளால திட்டுறதும் தீர்வாகாது.  மாறாக, குழந்தைகளோட சின்ன மனதுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லி அவங்களை நல்வழிப்படுத்தணும்" என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. அதை செயல்படுத்த அவர் தந்த ஆலோசனைகள் இங்கே.

''குழந்தைங்க தப்பு செய்யும்போது பெற்றோர்கள் அடிச்சா, தான் செஞ்ச தவறை அவங்க உணர மாட்டாங்க. தன் அப்பா, அம்மா தன்னை அடிச்சுட்டாங்க என்பதுதான் அவங்க மனசுல நிக்கும். அதனால, அவங்க செஞ்ச தப்பு என்ன, அதோட பிரீத்தா நிலாவிளைவுகள் என்னனு அவங்களுக்குப் புரியவைக்காம அவங்களை அடிக்கிறது, அவங்க நடவடிக்கையில் எந்த பலனையும் தராது.

இன்றைக்கு பெற்றோர் இருவருமே வேலைக்குப் போறாங்க. வேலை சூழல்ல நிறைய டென்ஷன். அது வீடு வரைக்கும் தொடரும். அந்த நேரத்துல குழந்தைங்க இயல்பா செய்ற சின்ன தப்பும், கோபத்தில் இருக்கும் பெற்றோருக்கு குற்றமா தெரியும். குழந்தைங்க மேல கோபத்தைக் கக்குவாங்க. இதனால சில பெற்றோரைப் பார்த்தாலே குழந்தைங்களுக்கு பயம் வரும். இந்தப் புள்ளியில் இருந்துதான் அவங்க பெற்றோரை விட்டு விலகியே இருக்க ஆரம்பிப்பாங்க.

குழந்தைங்கள நல்வழிப்படுத்தணும். அதேசமயம் குழந்தைங்களை முடிஞ்ச வரைக்கும் அடிக்கவும், திட்டவும் கூடாது. எப்படி? குழந்தைங்க ஏதாச்சும் தப்பு செய்றப்போ, அதை அவங்களுக்குப் புரியவெச்சு, சின்னதா ஏதாச்சும் தண்டனை கொடுக்கலாம். உதாரணமா, வீட்டுல சாக்பீஸ்ல ஒரு வட்டம் போட்டு, அதுக்குள்ள அவங்களை குறிப்பிட்ட நிமிஷம் வரை நிக்க வைக்கலாம். அப்போ அவங்ககிட்ட யாரும் பேசாத தனிமையை அவங்களுக்குக் கொடுக்கலாம். பொதுவா எந்த ஒரு குழந்தையும் தனிமையில இருக்கவும், ஒரே இடத்தில நகராம இருக்கவும் விரும்பாது. ஒருவேளை தான் தண்டனை வாங்கின தப்பை மறுபடியும் செய்யுற சூழல் வந்தா, 'அய்யோ அன்னைக்கு இதுக்குதானே பனிஷ்மென்ட் வாங்கினோம்'னு ஞாபகம் வந்து, அதைச் செய்ய மாட்டாங்க.

குழந்தை சேட்டை செஞ்சாலும், நாலு பேர் மத்தியில அதைச் சுட்டிக்காட்டி திட்டுறதைத் தவிர்க்கணும். தனியா கூப்பிட்டு கண்டிப்பதும், தவறை விளக்குறதும் நல்ல பலன் கொடுக்கும். பொதுவா இப்போதெல்லாம் பெற்றோர்கள், குழந்தைங்ககூட அதிக நேரம் செலவிடுவது இல்லை. அதுதான் இன்றைக்கு குழந்தைங்க செய்ற பெரும்பாலான தவறுக்குக் காரணம். குழந்தைங்களுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியாது. அவங்க வயசுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுத்துதான் புரியவைக்கணும்.

தினமும் தூங்க வைக்கிறப்போ குழந்தைங்க அன்னைக்கு என்னவெல்லாம் நல்லது செஞ்சாங்க, கெட்டது செஞ்சாங்கன்னு கதைகள் மூலமா, குழந்தைங்களை அதில் மறைமுக கதாபாத்திரங்களாக்கிச் சொல்லலாம். குழந்தைங்களுக்கு கதை ரொம்பப் பிடிக்கும். அது மூலமா நல்லது, கெட்டது சொல்றப்போ நிச்சயமா புரிஞ்சுக்குவாங்க.

ஒரு குழந்தை ஏதோ ஒரு தப்பை தொடர்ச்சியா செய்தா, அதோட விளைவை அது இன்னும் உணரலைன்னு அர்த்தம். அதனால அந்த தப்போட தீவிரத்தை அதுக்குப் புரியும்படியா எடுத்துச்சொல்லி, 'இப்போ நீ குட் பாயா இருக்க. இந்த தப்பும் செய்யாம இருந்தா உன்னை எல்லோரும் வெரி குட் பாய்ன்னு சொல்லி பாராட்டுவாங்க'ன்னு சொல்லி குழந்தையை மெல்ல மெல்ல நேர்வழிப்படுத்தலாம்.

'இன்னைக்கு ஒரு சேட்டை கூட செய்யல... பெஸ்ட் கிட்'னு சொல்லி, தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் குழந்தையின் கையில் ஸ்கெட்ச் கொண்டு ஸ்டார் போடலாம். சமர்த்தாக இருந்த நாளில், 'இன்னைக்கு உனக்கு அஞ்சு ஸ்டார்ஸ்' என்றும், 'இன்னைக்கு நீ ரெண்டு தப்பு செஞ்சேயில்ல... அதனால மூணு ஸ்டார்ஸ். நாளைக்கு சமர்த்தா இருந்து அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கணும் சரியா' என்றும் ஆர்வத்தைத் தூண்டலாம். தன் கையில இருக்கும் ஸ்டாரை நண்பர்கள், உறவினர்களிடம் குழந்தை காட்டி பெருமைப்படும். தொடர்ந்து, 'நீ வாரம் முழுக்க, மாசம் முழுக்க அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கினா, உன்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன்'னு சொல்லி, அதன்படி நடந்துகொள்ளலாம். இதெல்லாம் அன்பின் பாதையில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிகள்.

மாறாக, குழந்தை செய்யும் தவறை கண்டிச்சு, கண்டபடி அடிச்சு, திட்டும்போது குழந்தை மனசில் இறுக்கம்தான் அதிகமாகும். மேலும், பெற்றோரின் அந்த கோபத்தையும் அது கத்துக்கும். அதனால பள்ளியில் சக நண்பர்களுடன் ஏதாவது சண்டை வந்தா, தனக்குப் பிடிக்காத ஒன்றை நண்பர் செய்தா, தன் பெற்றோரின் நடவடிக்கை போலவே தானும் நண்பரை அடித்தோ, கடுமையான வார்த்தைகளால பேசவோதான் அந்தக் குழந்தை முயலும்.

அதனால, குழந்தைகளின் வழியிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்துவதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறை!''