மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?


மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள். சாதாரண அரசர்களே தங்களைச் சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் போது, சர்வலோக நாயகியான மீனாட்சி, மூவுலகங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்ததில் வியப்பேதும் இல்லையே! அவள் என்ன சாதாரண ராஜாக்களைப் போல் நாடுபிடித்து, தான் சம்பாதிக்கவா போருக்கு சென்றாள்? உலக உயிர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம்
அவர்களின் ஆணவத்தை அடக்கி நெறிப்படுத்தவே திக்விஜயம் சென்றாள். இந்த உலகம் தன்னுடையது என்பது போல் ஆட்டம் போடும் ஆணவக்காரர்களின் கொட்டத்தையும் அடக்க சென்றாள்.

மீனாட்சியம்மை பிறந்தபோது அவளுக்கு மூன்று மார்புகள் இருந்தன. பெற்றவர்கள் வருத்தம் அடைந்தனர். இயல்புக்கு மாறாக பிறந்துள்ள இவளை யார் திருமணம் செய்வார்கள் என்று யோசித்தார்கள். ஆனால் அம்பிகையோ காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டாள். சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன்
நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.

உலகின் முதல் இன்ஜினியர்:

ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் அவை எப்படி அமைய வேண்டுமென இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாவதற்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் யார் தெரியுமா?

சொக்கநாதரே தான்! அவரே உலகின் முதல் இன்ஜினியர். குலசேகர பாண்டிய மன்னன், சொக்கநாதர் கோவிலைச் சுற்றி நகரம் அமைக்க எண்ணியபோது, எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. குழம்பிய மன்னன் தீர்வு வேண்டி சொக்கநாதரை வேண்டினான். அப்போது சித்தர் வடிவில் மன்னரிடம் வந்த சொக்கநாதர், கோவிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகர் அமைக்கும்படி கூறினார். இவ்வாறு மதுரை நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்று வரைபடம் போட்ட சொக்கநாதர் நம் வாழ்க்கைப் பாதைக்கும் வரைபடம் போட்டுத் தருவார் என்பதில் சந்தேகமில்லை.

கிளி ரகசியம்:

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு
கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது