பாபநாசம் அகத்தியரின் கல்யாணத் தீர்த்தம்

பாபநாசம் அகத்தியரின் கல்யாணத் தீர்த்தம் !!!
அகத்தியர் சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார். ஆதி சிவனின் முழு அனுகிரகம் பெற்றவர். ஒன்றேகால் அடி உயரமே உள்ளவர், பிரணாயாமத்தில் கும்பகத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒரு நாளைக்கு ஒரு மூச்சு மட்டுமே விடக்கூடிய சிவராஜ யோகி.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக ( நீத்தார் கடன் தீர்க்க) விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் லோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் இவர்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் அறியப்பெறுகிறார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், இவருடைய சீடராக அறியப்பெறுகிறார்.
பழந்தமிழ் பாடல்களிலும் ,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். மேலும் அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப் படுகின்றன. பொன்னி நதியின் அகங்காரத்தை அடக்கி விநாயக பெருமானின் அனுகிரகத்தால் ”நடந்தால் வாழி காவேரி” என்று காவேரி நதியாக ஓட வைத்த மகான்.
கல்யாண தீர்த்தத்தில் குடைவரை கோவில் .
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை. திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கும் மேல் உள்ளது கல்யாணதீர்த்தம். அகத்தியர்க்கு கைலையில் நடந்த திருமண காட்சியை கண்ணுற்ற இடம். ( இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது அத்திரி தபோவனம் ) .காண கண்கோடி வேண்டும், ஒரு முறையேனும் சென்று பாருங்கள்!