கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும்போது - விதிமுறைகள்

கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும்போது….! கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் !!!


*ஆண்டவனின் சன்னிதானத்தினுள் நுழையும் போது கோயிலின் வாசலிலேயே நம் காலணியுடன் ‘நான்’ என்னும் அகந்தையையும் கழற்றி விட வேண்டும். அமைதியுடன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பேசுவதை அதிலும் அபசகுனமாகப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

*கோயிலினுள் நுழையும் போதுதான் தான தர்மங்களைச் செய்ய வேண்டும் – திரும்பி வரும் போது செய்யக் கூடாது .

* கோயிலை வலம் வரும் முன்பு நமஸ்காரம் செய்ய வேண்டும். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு கோயிலினுள் செல்லக்கூடாது. ஆண்களாக இருந்தால் தலைப்பாகையைத் தவிர்க்க வேண்டும்.

*நெற்றியில் பொட்டு ஏதும் இடாமல் செல்வதோ, வெறுங்கையுடன் செல்வதோ கூடாது.

*கோயிலில் தரப்படும் பிரசாதத்தை வலது கையினால் வாங்கி அப்படியே கைமாற்றாமல் வலது கையால் உண்ண வேண்டும்.

*சன்னதியில் நின்று ஒருபோதும் கண்ணீர் விடுவதோ அழுவதோ கூடாத ஒன்று. ஆண்டவன் முன்பு நின்று அழுதுதான் கேட்க வேண்டுமென்பது தவறான கருத்து.

*கர்ப்பகிரகத்தில் சுவாமி அலங்காரத்துக்காகத் திரை போட்டிருக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

*கோயில் உள்ளே அமர்ந்து தேவையில்லாமல் விவாதம் செய்வது, மார்பிலோ, தலையிலோ அடித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது.

*கோயிலினுள் பிற மனிதர்களை வணங்குவதும் – வாழ்த்துவதும் கூடாது. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கூடாது.

*மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தபடியே கோயிலை வலம் வர வேண்டும். வேறு சிந்தனைகள் கூடாது.

நியாயமான வேண்டுதல்களை ஆண்டவன் முன் வைக்க வேண்டும். நல்ல மனதுடன் ‘அவனை’ தியானம் செய்தால் நிச்சயம் அவன் தேடி வந்து நம்முள் குடிபுகுவான். நல்ல மனம்தானே நாளும் ‘அவன்’ தங்கியிருக்கும் கோயில்!