கருவுற்ற பெண்களுக்கு.

கருவுற்ற பெண்களுக்கு.......


நமது ஞான நூல்கள் அனைத்துமே பழுத்த அனுபவத் தாலும், தெளிந்த முதிர்ச்சியினாலும் உருவானவை. 'ஏதோ, எனக்குப் பேசத் தெரியும்; எழுதத் தெரியும்' என்கிற எண்ணத்தில் ஒரு நூல்கூட உருவாகவில்லை. அதனால்தான், அச்சு இயந்திரம் என்பதைப் பற்றிய நினைப்புக்கூட இல்லாத நாட்களில் உருவான தகவல்கள்கூட இன்றைய நாட்களில் கணினியில் ஏறி, கை வழியே நம் கருத்தில் பதிகின்றன.
என்னதான் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், எந்தவிதமான வசதிகளும் இல்லாத காலங்களில் நமது முன்னோர்கள் சொல்லிவைத்துவிட்டுப்போன தகவல்கள், இப்போதும் நமக்கு பிரமிப்பு ஊட்டுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றை- உதாரணமாக, 'மகப்பேறு' பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கருவுற்ற பெண்களுக்கு உண்டான நீராடும் நீர், உணவு, படுக்கை, செய்யக்கூடாதவை என அனைத்தை யும் விரிவாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
நீராடும் நீர்- இது வில்வம், பருத்தி, பாவட்டை, பாதிரி, வேம்பு, முன்னை, ஜடமாம்சி, ஆமணக்கு ஆகியவற்றின் இலைத் துண்டுகளின் கஷாயத்தைக் குளிர வைத்தோ, அல்லது... கஸ்தூரி மஞ்சள் முதலிய வாசனைப் பொருட்களுடன் சேர்த்தோ தயாரிப்பது. இதனைக் கொண்டு கர்ப்பிணிப் பெண்ணை தினமும் நீராட்ட வேண்டும். மேலே சொன்னவற்றில் எல்லாப் பொருள்களுமே கிடைக்கவேண்டும் என்பதில்லை; கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டும் 'நீராடும் நீர்' தயாரிக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கான உணவு- இது அவர்களின் மனத்துக்கு மிகவும் உகந்தது. பெரும்பாலும் திரவமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இனியது, நெய்ப்புள்ளதாக இருக்கும் இந்த உணவு பசியைத் தூண்டும் பொருட்களால் பக்குவம் செய்யப்பட்டிருப்பது அவசியம். இப்படிப்பட்ட உணவைத்தான் கர்ப்பிணிப் பெண்களை உண்ணச் செய்ய வேண்டும். இந்தத் தகவலைச் சொல்லும் பாடல்...
ஹ்ருத்யம் த்ரவம் மதுர ப்ராயம்
ஸ்நிக்தம் தீபநீய ஸம்ஸ்க்ருதம் வ
போஜனம் போஜயேத்
(ஸுச்ருத ஸம்ஹிதை)
அடுத்து, அவர்களுக்கு முக்கியமான உணவையும் இன்னொரு நூல் கூறுகிறது.
நவநீத க்ருத க்ஷீரை;
ஸதா சைநாமு பாசரேத்
(அஷ்டாங்க ஹ்ருதயம்)
கருத்து: வெண்ணெய், நெய், பால் ஆகியவற்றால் கர்ப்பிணியை எப்போதும் உபசரிக்க வேண்டும்.
உணவு வகைகளைப் பற்றி இவ்வாறு சொன்ன முன்னோர்கள், படுக்கையைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். அதைக் குறிப்பிடும் பாடல்...
சயநாஸனம் ம்ருத் ராஸ்தரணம்
நாத்யுச்சம பாச்ரயோ பேதமஸம்-
பாதம் விதத்யாத்
(ஸுச்ருத ஸம்ஹிதை)
கருத்து: கர்ப்பிணிக்கு மென்மையான விரிப்பு உள்ள, அதிக உயரம் இல்லாத, தகுந்த சாய்மானம் உடைய, நெருக்கம் இல்லாத... இப்படிப்பட்ட படுக்கை, அமரும் சாதனம் ஆகியவற்றை அவளுக்காக அமைக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை பற்றியும் அந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதிகமான ஓய்ச்சல், சுமை, கனமான போர்வை அல்லது ஆடை, நேரங்கெட்ட நேரத்தில் கண் விழித்தல், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, கடினமான ஆசனத்தில் உட்காருவது, மிகவும் ஒடுக்கமான இடத்தில் உட்காருவது ஆகியவை கூடாது.
அதேபோல் பட்டினி கிடப்பது, வழி நடப்பது, மல- சிறுநீரை அடக்குவது, சிவப்பு நிறமுள்ள ஆடை அணிவது, சுலபமாக ஜீரணமாகாத உணவு, ஆழமான பள்ளம்- கிணறு ஆகியவற்றைக் குனிந்து பார்ப்பது, மது- மாமிசம் உண்பது, மல்லாந்து படுப்பது ஆகியவற்றையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.
தவிர, காய்ந்து போனது, பழையது, மிகவும் குழைந்து போனது இப்படிப்பட்ட உணவையும் உண்ணக் கூடாது!
அடிக்கடி மல்லாந்து படுக்கும் கர்ப்பிணியின் கருவினுடைய தொப்புள் கொடி, குழந்தையின் கழுத்தைச் சுற்றும். அதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.
நை வோந்நதா ந ப்ரணதா
ந குரும் தாரயேச்சிரம்
உத்வேஜனம் ததா ஹாஸ்யம்
ஸங்காதம் சாபி வர்ஜயேத்
(காச்யப ஸம்ஹிதை)
கருத்து: கர்ப்பிணியானவள் நிமிர்ந்து நிற்றல், வணங்கி இருத்தல், கனத்த பொருளை வெகு நேரம் தூக்கிக் கொண்டு இருத்தல், அதீத பயம், அடக்கமாட்டாத சிரிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறிய முன்னோர்கள், கரு உருவானதும் (அது ஆணாகவோ பெண்ணாகவோ வடிவம் பெறுவதற்குள்ளாக) 'ஆண் குழந்தை வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்ன?' என்று ஓர் அரிய தகவலையும் கூறியிருக்கிறார்கள்.
இதே நூல், கருவில் குழந்தை இருக்கும் நிலையை வர்ணிப்பதைப் பார்த்தால், ஏதோ இந்தக் காலத்தில் 'மகப்பேறு மருத்துவமனை'களில் ஒட்டி வைத்திருக்கும் படத்தைப் பார்த்து, நேர்முக வர்ணனை செய்வதைப் போலிருக்கிறது. அதை விவரிக்கும் பாடல்...
கர்பஸ்து மாது: ப்ரஷ்டாபி முகோ
லலாடே க்ருதாஞ்ஜலி:
ஸம்குசி தாங்கோ கர்ப கோஷ்டே
தக்ஷிண பார்ச்வ மாச்ரிதோ வதிஷ்டதே புமான் வாமம் ஸ்த்ரீ
தத்ர ஸ்திதஸ்ச கர்போ மாதரி
ஸ்வபந்த்யாம் ஸ்வபிதி ப்ரபுத்தாயாம் ப்ரபுத்யதே!
(அஷ்டாங்க சங்க்ரஹம்)
கருத்து: கருப்பையில் இருக்கும் குழந்தை, தாயின் முதுகுப்புறத்தை நோக்கியவாறும், நெற்றியில் கூப்பிய கைகளைக் கொண்டதாகவும், குறுக்கிய உடலைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
ஆண் குழந்தை என்றால் வலது பக்கத்திலும், பெண் குழந்தை என்றால் இடது பக்கத்திலும் தங்கி இருக்கும். தாய் தூங்கும்போது குழந்தையும் தூங்கும்; தாய் விழித்திருக்கும்போது குழந்தையும் விழித்திருக்கும்.
- இவ்வாறு பலவிதமான தகவல்களைச் சொல்லும் இந்த நூல், பிரசவத்துக்குப் பின் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக விவரிக்கிறது.
அற்புதமான அந்த நூலின் பெயர்- 'கர்ப்பிணீ ர¬க்ஷ'. ஸம்ஸ்க்ருத மூலத்துடனும் தமிழ் உரையுடனும் 'தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் லைப்ரரி' இதை வெளியிட்டுள்ளது.
அரும்பாடுபட்டு பழங்கால ஓலைச் சுவடிகளில் இருந்து இதுபோன்று பல அபூர்வமான நூல்களை சரஸ்வதி மஹால் லைப்ரரி வெளியிட்டுள்ளது.
அந்த நூல்களின் மூலம் நமது முன்னோர்களின் அறிவாற்றல், ஒழுக்கம், சலியாத உழைப்பு ஆகியவற்றை நாம் உணரலாம்.