கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி.

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி...ஒரு உஷார் ரிப்போர்ட்...!!!

முக்கனி என்று அழைக்கப்படும் மா,பலா,வாழை யில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.

மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.

தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும், அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.

அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.

“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால் அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.

பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று எண்ணி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட கடைகளை தொடர்ந்து இரவு பகல் பாராது திடீர் திடீரென்று ஆய்வு செய்து கண்காணித்து கார்பைடு பழங்களை அழித்து மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.