சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!

சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். மூலவருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
இந்த ஆலயத்தினுள் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இரண்டாவது ராஜகோபுரத்திற்கு வெளியே, அனுக்ஞை விநாயகர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது “ஞானவாவி தீர்த்தம்”. “வாவி’ என்ற சொல்லுக்கு குளம் என்று பொருள்.
ஒருமுறை திருஞானசம்பந்தர் வெம்மையால் வாடி, மிகவும் களைப்பாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். தன் களைப்பினை போக்கிக்கொள்ள வேண்டி தேனுபுரீஸ்வரரை வழிபட ஆலயத்திற்குள் நுழைந்தார். திருஞான சம்பந்தருக்கு இந்த ஞானவாவியின் தீர்த்தத்தினை இறைவனே முகந்து வழங்கினார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் குளத்தில் இருந்து எடுத்துக்கொடுத்த தீர்த்தம் பாலாக மாறியது. அந்த ஞானப்பாலை திருஞானசம்பந்தர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றார்.
திருஞான சம்பந்தருக்கு முதலில் சீர்காழியில் வானமார்க்கமாக வந்த தேவியால் ஞானப்பால் வழங்கப்பட்டது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இரண்டாவது முறையாக ஞானவாவி தீர்த்தத்திலிருந்து ஞானப்பால் வழங்கப்பட்டது. இந்த ஞானவாவி தீர்த்தத்தில் நீராடுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த ஞானம் கிடைக்கப் பெறுகிறார்கள். சரியாக படிப்பு வரவில்லை என்று கவலைப்படும் மாணவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி பலன் அடைகிறார்கள்.
இக்கோயிலின் இன்னொரு புனித தீர்த்தம் “கோடி தீர்த்தம்’. நவகிரக சந்நிதியின் மேற்கு திசையில் இருக்கிறது தெய்வத்தன்மை வாய்ந்த கிணறு. இதுதான் “கோடி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான் ஒருமுறை இக்கோயிலின் தேனுபுரீஸ்வரரை வழிபட வந்தபோது பேராற்றல் மிகுந்த வில்லின் ஒரு முனையில் இக்கிணறைத் தோற்றுவித்தார் என்கிறது தலபுராணம். தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இந்த கோடி தீர்த்தத்தில் நீராடினால் தீவினைகள் நீங்கி நலம் பெறலாம்.
ஆந்திரப் பிரதேச மலையில் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் தென்கரையில் உள்ளது ஸ்ரீசைலம் சிவஸ்தலம். நந்திகொட்கூர் பகுதியில் உள்ள ஒரு மலையின் மீது சுமார் பதினைந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில். நம் பாவங்களை எல்லாம் போக்கும், கங்கையின் பாவத்தையே போக்கிய பாதாள கங்கை தீர்த்தம் இக்கோயிலில்தான் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் மலையின் வட கிழக்கு திசையில் 1500 அடி இறக்கத்தில் ஆரம்பமாகிற கிருஷ்ணா நதியைத்தான் இங்கே பாதாள கங்கை தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.
அனந்தபுரத்தில் கல்யாணவதி என்கிற இளம்பெண் தினமும் கங்கை நதிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது வழியில் ஒரு அழகான வாலிபனைக் கண்டு மயங்கியவள் தவறு செய்தாள். அதற்குப் பிறகு அவள் கங்கை நதியில் குளிக்க முயன்றபோது கங்கா மாதா அவளைத் தடுத்தாள். “கணவனுக்கு துரோகம் செய்த உன்னுடைய ஸ்பரிசத்தால் என்னுடைய பரிசுத்தத்தை பாழாக்கி விடாதே. மீறினால் சபித்துவிடுவேன்” என்று கோபத்துடன் கூறினாள்.
கங்கையின் கோபம் கண்டு கதறி அழுதாள் கல்யாணவதி. “தாயே என் பாவத்தை நீக்க வேண்டிய நீயே என்னைத் துரத்தினால் நான் எங்கு செல்வேன். என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சினாள். மனம் இரங்கி அவள் குளிப்பதற்கு அனுமதியளித்தாள் கங்கை.
கல்யாணவதி கங்கையில் குளித்து புனிதமானாள். ஆனால் கல்யாணவதியால் தான் மாசடைந்துவிட்டதாக கருதினாள் கங்காதேவி. தனக்கு ஏற்பட்ட மாசினைப் போக்க, ஸ்ரீசைலத்தில் உள்ள பாதாள கங்கையில் நீராடி புனிதம் அடைந்தாள். இந்த நதியில் உள்ள கற்கள் லிங்க ரூபத்தில் இருப்பது சிறப்பு. பாதாள கங்கை தீர்த்தத்தில் மூழ்கிக் குளிப்பவர்கள் பாப விமோசனமும், முக்தியும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்து துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றது. இராகுக்கு அதிதேவதை ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி ஆவாள். இவ்வம்பிகைத் திருக்கரங்களில் சங்கோடு சக்கரம் தரித்து இருப்பதால் துர்க்கா லட்சுமி என்றும் விஷ்னுதுர்க்கை என்றும் போற்றப்படுகிறாள். கேட்டவருக்கு கேட்டவரம் நல்கும் இவ்வன்னை பூவுலகின் கற்பக விருட்சம். வெற்றித் திருமகுடம். இராகுவினால் ஏற்படும் கெடுபலன்களிலிருந்து விடுபட ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு 9 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும். கல்வியில் தேர்ச்சி பெறுவர். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும் நினைத்த காரியம் கைகூடும்