பனம்பழம்

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்:
தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும்.
வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழிக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். பசேலென்று தழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம் வாழையை விடவும் கூடுதலாக பயன்படுத்திய மற்றொரு தாவரம் பனை தான்.
அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையும் மொத்த பனை மரங்களில் 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களான இலக் கியங்களை தனது பழுத்த இலைகளில் (ஓலை) பல தலைமுறைகள் கடந்து தாங்கி வந்ததால் ஒரு வேளை பனைக்கு இந்த அங்கீகாரமாக இருக்குமோ? போரரஸ் என்னும் தாவர குடும்பத்தைச் சார்ந்த பனை மரம் அதிக பட்சமாக 30 மீட்டர் வரை கூட வளரும் தன்மை கொண்டவை. “கேட்டதைத் தரும் கற்பகத்தரு” என்றே தமிழர்கள் இதனை அழைத்தனர். காரணம் பழந்தமிழர் வீடுகளின் கூரைகளை கடும் வெப்பத்தின் பிடியில் காக்கும் பனை ஓலைகளைக் கொண்டு வேய்ந்தனர்.
அதற்கான உத்திரங்களை பனை மரங்களைக்கொண்டு உருவாக்கினர், பனையின் குருத்துக்களிலிருந்து செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் சுளவு ஆகியவற்றில் பல சரக்கு பொருட்களை இட்டு வைத்தனர். பால் பொருட்கள் வைக்கப்பட்ட பானைகளை பனை உறிகளில் வைத்து தொங்கவிட்டனர், பனைஓலையில் செய்யப்பட்ட பாய்களில் படுத்துறங்கினர். பனையால் செய்யப்பட்ட துடைப்பங்கள், பனை நாரிலிருந்து கயிறுகள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பனை விசிறி, குடை, காதணிகள், சிறுவர் விளையாடும் காற்றாடி, பனையோலை வெடி, பனங் கள், வாசல் கால்மிதிகள், தடுக்குகள், மீன் மற்றும் இறைச்சிகள் வைக்கும் பெட்டிகள் என பனையால் நிறைந்தது தமிழர் வாழ்வு. இவற்றையெல்லாம் தாண்டி பனை நுங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனம்பழம், பதநீர், பனங்கிழங்கு என பனை தமிழர் வாழ்வில் தனது அத்துனை பாகங்களாலும் பின்னிப் பிணைந்தது. பனம்பழம் சிறந்த சத்துணவு. பனம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து கண்பார்வைக்கு மிகவும் நல்லது. தமிழகத்தைப்போலவே தமிழர்கள் மிகுந்து வாழும் யாழ்ப்பாணம், மன்னார், வடமராச்சி ஆகிய பகுதிகளிலும் பனை மரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டன. அங்குள்ள தமிழர்கள் பனம்பழத்திலிருந்து பெறப்பட்ட கூழிலிருந்து ஜாம், குளிர்பானங்கள், உணவுப்பொருட் களை தயாரித்தனர்.
பனம்பழத்திலிருந்து ஒருவித துணிசோப்பினை உருவாக்கினர். போர்க்காலங்களில் வேதியியல் பொருட்களால் ஆன துணிசோப்புக்கள் கிடைக்காத போது பனம்பழங்களையே அதற்குப்பதிலாக பயன்படுத்தினர். பனம்பழத்திலிருந்து ஒருவித பற்பசையையும் கண்டுபிடித்து அதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். பனம்பழம் ருசிக்க சுவையானது. ஏனைய பழங்களைப் போல் பனம்பழத்தை நேரடியாக உண்ண மாட்டார்கள். இதனை நெருப்பில் சுட்டு உண்பது தமிழகத்தில் வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள். இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு.
இக்களியைப் பிழிந்து, வெயிலில் காயவிட்டு பனாட்டு எனப்படும் உணவுப்பொருள் பெறப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. தமிழகத்தில் பனம்பழத்தை சுட்டு வெல்லம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு. பனங்கற்கண்டு இருமலுக்கும், சளித் தொல்லைகளுக்கும் சிறந்த மருந்து. பனங்கிழங்கும் வேகவைத்து சாப்பிட தோதான மாலை நேரத்து விருந்து. சுடவைத்த பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது சில தொழில் முறை பாடகர்களுக்கு குரல் வளம் காக்கும் உபாயமாக இருக்கிறது. சேர மன்னர்கள் போருக்குச் செல்லும்போது தங்கள் வெற்றியை உறுதி செய்யும் விதமாக பனம் பூவைச் சூடிச் செல்வார்கள்.
பனையிலிருந்து பெறப்படும் நுங்கும், பனங்கற்கண்டும் மட்டுமே இன்றைக்கு பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. பதநீர் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது. பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பம் தணிக்கப்படுகிறது. பனை ஓலை, மட்டை, பத்தல் என்ற மூன்ற பகுதிகளை கொண்டது. பத்தல் என்பது மட்டையின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும். அந்த காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான கிராமவாசிகள் பத்தல்களை வெட்டிக் காலுக்குச் செருப்பாக அணிந்து கொள்வார்களாம். மேல் வாருக்குப் பனை நாரைப் பொருத்திக் கொள்வார்களாம். இதை அணிந்து கொண்டு செல்லும்பொழுது காலுக்கு மிருதுவாக இருப்பதுடன் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாக இருக்கும். சாலைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பத்தல்களாலான செருப்புகளை அணிவதுண்டு. அடிப்பகுதி அதிகமாகத் தேய்ந்துவிட்டால் வேறு இரண்டு பத்தல்களை வெட்டிக் கால் செருப்புகளை செய்து கொள்வர். வளரும் பருவத்திலுள்ள வடலி பனையின் பத்தல் களில் அடிப்பாகத்தில் கருப்பாக கம்பி போன்ற உறுதியுடன் இருக்கும் பகுதிக்கு தும்பு என்று பெயர். இந்த தும்பியிலிருந்துதான் இயந்திரங்கள், கப்பல்களை சுத்தப்படுத்தும் துடைப்பான்களை செய்கிறார்கள். பனை ஓலைச்சுவடிகள்தான் நமது பொக்கிஷங்கள். அவற்றை எப்படி தயாரித்தார்கள் என்பது வியப்பான விஷயமே.
சுவடிகள் தயாரிப்பதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஏடுகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படு கிறது. பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பனை அதிகம் விளைவதால், தேசிய பனை ஆராய்ச்சி மையம், பனை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகியன சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகம் பனை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13&ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். பாரியின் மரணத்துக்குப் பின் அவ்வையாரின் முயற்சியால் மலையமான் மகன் தேவகன், பாரி மகளிரான அங்கவை மற்றும் சங்கவையை மணம் செய்துகொள்ள சம்மதித்தான். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் வேண்டும் என கேட்டார்களாம். அது பனம்பழத்துக்கான விளைச்சல் காலமில்லை. என்றாலும் விருந்தினர் மனம் கோணாமல் இருக்க அவ்வையார் வெளியே வந்தார். மணப்பந்தல் போட்ட இடத்தில் பந்தலுக்காக வெட்டிப்போட்டு மீதியிருந்த பனை மரத் துண்டத்தைப் பார்த்து, “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட வந்துநின்றார் மணப் பந்தலிலே சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து, நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!” என்ற பாடலைப் பாட, பனந்துண்டம் முளைத்து வளர்ந்து உடனே பழம் தந்ததாம். பனை மரம் வெறும் தாவரம் மட்டும் அல்ல. நம் தமிழர் வாழ்வின் அடையாளம்.
——- திருக்குறளில் பனை ****************************** திருக்குறளில் மொத்தமே இரண்டு மரங்கள் தான் இடம்பெற்றுள்ளன. ஒன்று மூங்கில் மற்றது பனை. அறத்துப்பாலில் செய் நன்றி அறிதல் அதிகாரத்தில் 104&வது குறளில், ‘தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் உதவியின் பயனை அறிந்தவர்கள், பனை அளவு பெரிதாகவே கருதுவர்.