மருத்துவ குணம் கொண்ட மேலக்கொழுந்துமா மலை முருகன்

மருத்துவ குணம் கொண்ட மேலக்கொழுந்துமா மலை முருகன் !!!

திருநெல்வேலி மாவட்டம், புதுக்குடி, காருகுறிச்சி கிராமங்களுக்கு அருகில் உள்ள மேலக்கொழுந்துமா மலையில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம்.

பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு அருள்செய்யும் விதமாக மேற்கு நோக்கி பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் இங்கு முருகன் அருள்பாலிக்கிறார். இம்மலையிலேயே பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு கொழுந்தே கொழுந்துமா மலை எனப் பெயர் பெறக்காரணமாக அமைந்ததாக தெரிய வருகிறது. இம்மலையில் சிறப்பான மருத்துவ குணம் கொண்ட செடிகொடிகள் நிறைந்துள்ளன.

சிறப்புமிக்க இத் திருக்கோயிலில் தினசரி பூஜைகளுடன் கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், பௌர்ணமி, மார்கழி மாத பூஜைகள் கொண்டாப்பட்டு வருகின்றன. திருக்கார்த்திகை தினத்தில் மலையின் உச்சியில் பெரிய அகழி ஒன்றில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். விழாக்காலங்களில் பக்தர்கள், பால்குடம், காவடி, தலைமுடி காணிக்கை தருதல் போன்ற பிரார்த்தனைகளை செய்கின்றனர். மலையைச் சுற்றி வரும் வழியில் காணப்படும் நீர் ஊற்றுகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன.

மேலும் இம் மலையினின்று பார்த்தால் மேற்கே எழில்மிகு பொதிகை மலையும், தெற்கே வெள்ளி மலைத்தொடரும், வடக்கே பல ஊர்களும் அருமையான வயல்வெளி, தோப்புத் துரவுகளும் காணக்காண ரம்மியமாக இருக்கும். இக்கோயிலை இங்குள்ள மக்கள் மலைக்கோயில் என்கிறார்கள்.

திருநெல்வேலியிலிருந்து சேரன்மாதேவி வழியாக வடக்கு காருகுறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில் புதுக்குடி என்னுமிடத்தில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம்.