நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!

நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும், நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக “சூரிய தேவன்” இடப்புறம் உஷா தேவியுடனும், வலப்புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத் தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு.
பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன். சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.
சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத்தலத்தில் உட் பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். மற்ற ஆலயங்களை போலல்லாது இத்திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில் எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் “ஆதித்ய ஹிருதயத்தை ” மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகும்.
இந்த ஆலயத்தின் வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள “திருமங்கலக்குடி” சென்று “பிராணவரதரையும்”, அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும். பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.
அதன் பிறகு, வெளிப்பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும்.
கடைசியாக சுக்கிர பகவானையும், ராகுவையும் வழிபட வேண்டும். மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக (மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல) வலம் வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.
தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் இரவு 8 வரை திறந்திருக்கும்.