நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!

ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை “கைலாய விமானம்’ என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
சௌந்திர நாயகர், சுந்தர நாதர், பஞ்ச வர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என்று பல பெயர்களிலும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார்.
இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது. இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
பகலில் ஆறு நாழிகைகளுக்கு ஒரு முறை நிறம் மாறும் இந்த சுயம்புலிங்கம், காலை 6 முதல் 8.25 வரை தாமிர நிறத்திலும், காலை 8.26 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும், மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என அறிய முடியாத வண்ணத்திலும் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.
இந்த மூல லிங்க அமைப்பில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக உள்ள சிறிய பாணத்தை பிரதிஷ்டை செய்தவர் அகத்திய ரிஷி என்பார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர், கிரி சுந்தரி. மிகப் பெரிய வடிவில், பேரழகுடன், சுவாமிக்கு வடகிழக்கில் தனிக் கோயிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பாள்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடி மரத்துப் பிள்ளையார், கொடிமரம், பலிபீடம், ரிஷப தேவரின் சந்நிதி ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் இடது புறம் அமர் நீதியார் தராசு மண்டபமும், வலதுபுறம் உற்சவ மண்டபமும் உள்ளன. அடுத்து மூன்று நிலை உட்கோபுரம். உள்ளே காசி பிள்ளையாரை கடந்து சென்றால், அழகிய மண்டபம். அதன் வலது புறத்தில்தான் அருள்மிகு கிரி சுந்தரி அம்பிகையின் சந்நிதி உள்ளது. எதிரே மூலவர் கல்யாண சுந்தரர், கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்கையும் காட்சியளிக்கின்றனர். இரண்டு திருச்சுற்றுகளை உடைய இத்திருக்கோயில் 316அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.
இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் பல. சப்த சாகரம், அக்கினி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம்ம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவையே அவை. இங்கு தல விருட்சம், வில்வ மரமாகும். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இவ்விறைவனை வழிபட, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் தென் பிரகாரத்தில், எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ மகா காளிகாம்பாள். சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆலயம் திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மதியம் 1 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
அமைவிடம்:
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம். இதன் கிழக்கில் உள்ள வாழைப்பழக்கடை என்ற இடத்திலிருந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லூர் என்ற இந்தத் தலம். சுந்தரப் பெருமாள் கோயில் என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கில் இரண்டரை கிலோமீட்டர் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு இத்தலத்தில்தான் பரமேஸ்வரன், “திருவடி தீட்சை’ அளித்தார். அதை நினைவூட்டும் வகையில் இங்கு வைணவக் கோயில்கள் போல் “சடாரி’ சாதிக்கும் மரபு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம், அப்பராகிய நாவுக்கரசருக்கு திருவடி தீட்சை தந்த தலம் ஆகிய பெரும் பெருமைகளைக் கொண்ட திருத்தலம் இது.