சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!

சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.
இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். இந்த விநாயகரின் முதுகில் "நாளை வா' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு "முதுகைப் பார்' என்கிறார். அவர் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.
இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.
இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.
"பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்' எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.
இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.
இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித் தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.
மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார்.
இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிரா மத்திற்குச் செல்ல வேண்டும்.
சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப் பது சிறப்பாகும்.
சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு மிகவும் புகழ்பெற்றது. சனி பகவான் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வார் என்று சொன்னாலும், நள மகராஜா விஷயத்தில் சுயநலத்தைக் காட்டிவிட் டார் என்று புராணம் கூறும். அந்த தோஷம் நீங்க, திருநள்ளாறு திருத்தலத்தில் அருள்புரியும் தர்ப்பராண்யேஸ்வரரை வழிபட்டு தன் தவறுக்கான பரிகாரம் கேட்டார் சனி பகவான். தன் தவறை உணர்ந்ததால் சனி பகவானை தியானத்தில் நின்று அருளும்படி கூறினார் சிவபெருமான். அதனால் திருநள்ளாற்றில் சனி பகவான் கண்கள் மூடிய நிலையில் மௌனமாகக் காட்சி தருகிறார். இவரை சாஸ்திர சம்பிரதாயப் படி வழிபட சனியின் தாக்கம் நீங்கும். இவருக்கு அர்ச்சனை செய்தால் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருக்கொள்ளிக்காடு தலம் திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ளது. இங்கு இறைவன் அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இறைவி: மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கியதாகப் புராண வரலாறு கூறும். இங்கு சனி பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் அருள்புரியும் இறைவன் வான்மீகநாதர். இறைவி- கமலாம்பிகை. இத்தலத் தில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர். இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்செந்தூர் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டாலும்; திருச்சி உறையூரில் கூரை இல்லாத சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோவிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டா லும் சனியின் தோஷங் கள் நீங்கும்.
குடந்தை நாகேஸ் வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள் புரிகிறார். இத்தலத்தில் உள்ள சனி பகவான், "ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்' என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக்கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிச் சந்நிதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினி களுடன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை சனிக்கிழமை களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே சமயத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் வழிபடுவ தால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேயரும், சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஆஞ்சனேயரும் மிகவும் உயரமானவர்கள். சக்திவாய்ந்த இவர்களை வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஸ்ரீஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஸ்ரீஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும். திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீநரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான ஸ்ரீபாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப் பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் "புக்கா பொடி' என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண் டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஸ்ரீஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி.
இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.
புகழ்பெற்ற வைணவத் தலங் களில் தசாவதாரச் சந்நிதி இருக்கும். அங்கு எழுந்தருளியுள்ள கூர்ம
அவதாரத்திற்கு அர்ச்சனை செய்து கற்கண்டு சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தொந்தரவு இருக்காது. சனி பகவானை வழிபடும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:
"விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.'
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.