காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் உள்ள சிற்றூர் கேரளபுரம். இங்குள்ள ஆலயம் “வீரகேரளபுரத்து மகாதேவர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சிறப்பூட்டுவதும், மக்களை வியப்படையச் செய்வதும் இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர். இப்பிள்ளையார் ஆறு மாதங்கள் வரை கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வரை வெளுப்பாகவும் காட்சி தருகிறார்.

அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கறுப்பாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை வெளுப்பாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த அதிசய விநாயகர் ஒரு கால் ஒடிந்து காணப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இக்கோயிலின் குருக்கள் தவறு செய்வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு முதியவர் தாழிட்ட கதவை பலமாகத் தட்டியுள்ளார். கோபத்துடன் கதவைத் திறந்த கோயில் குருக்கள் முதியவர் என்றும் பாராமல் ஆத்திரத்தோடு அவரை வேகமாகத் தள்ளிவிட்டார். தடுமாறிக் கீழே விழுந்த முதியவரின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அதைக் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

மறுநாள் குருக்கள், கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது, விநாயகப் பெருமானின் ஒரு கால் ஒடிந்திருப்பதைக் கண்டு வியப்பும், அச்சமும் அடைந்தார். தனக்கு அறிவுரை கூற வந்த முதியவர் விநாயகரே என்பதை அறிந்து வருந்தினார். தன் செயலுக்காக பிள்ளையாரிடம் மன்னிப்புக் கேட்டவர் மனம் திருந்தினார். இதுவே காலொடிந்த பிள்ளையாரின் கதை.